தருவை கிராமத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள அபூர்வ மண்டத்தினை பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த மண்டபத்தின் முன்பு கிழக்கு நோக்கி படித்துறை காணப் படுகிறது. மண்டமும் கிழக்கு நோக்கிதான் உள்ளது. உள்ளே விநாயகர் சிலை உள்ளது. இதில் மேற்கே இருந்து வரும் தண்ணீர் வேகம் மண்டபத்தினை பாதித்து விடக்கூடாது என ஓட்டை ஒன்றை போட்டு வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் முன் பகுதியில் தண்ணீர் வேகமாக செல்ல வேண்டும் என திறந்த வெளியாக விட்டு இருக்கிறார்கள். அருமையா ன தொழில் நுட்பம் எத்தனை வெள்ளம் வந்தாலும் கூட இந்த மண்டபங்கள் இப்போதும் கம்பீரமாக உள்ளது.
மண்டபத்தின் உள்ளே உள்ள ஆற்று மணலை துப்புறவு செய்து மேலும் மண்டபத்தினை ஆய்வு செய்தால் கூடுதலாக கல்வெட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே உழவாரபணியினர் இந்த மண்டபத்தினை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு உள்ளூர் பிரமுகர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கிடையில் நான் தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அதிகாரி ஆசைத்தம்பி அவர்களிடம் இந்த மண்டபம் குறித்தும் படங்களை எடுத்து அனுப்பியிருந்தேன். அதை பார்த்துவிட்டு எனக்கு கீழ்கண்ட தகவலை ஆய்வாளர் எனக்கு அனுப்பியிருந்தார்.
“1600 வைகாசி மாதம் 3 நாள் கோட்டை சூரப்ப அய்யன் மகன் வெங்டேச அய்யன் அவர்களின் தர்மப் பத்தினிக்காக செய்துவித்த சங்கையர் மண்டம் என எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள முதல் எழுத்து சற்று மறைவாக தெரிகிறது. அதை வைத்து படிக்கும் போது சங்கமம் என தெரிகிறது. இங்கு இரண்டு மீன் சின்னம் உள்ளது. இந்த மீன் சின்னம் பொதுவானதுதான் . இது பாண்டியர்கள் ஆட்சி செய்த இடம் தான். ஆனால் இந்த மீன் சின்னம் வளமைக்காக கருதப்படும் முறையில் இங்கே அமைக்கப் பட்டுள்ளது. நீர்நிலைகளில் பிள்ளையாரை வைப்பது மரபு. அதன்படித்தான் இங்கு பிள்ளை யார் உள்ளார். என்று அவர் கூறினார்.
நான் (முத்தாலங்குறிச்சி காமராசு) தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற நீதி பதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் வழக்கு 18402/2018 படி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மண்டபங்களை சீரமைக்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணி தற்போது விரைவாக நடந்து வருகிறது. தாமிரபரணி முழுவதும் உள்ள மண்டபங்கள் கணக்கெடுக் கப்பட்டு சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் மூடிக்கிடக்கும் பச்சையாறு சங்கம தீர்த்த மண்டபத்தினை சூழ்ந்து உள்ள மண்டபத்தில் உள்ள மண்ணை அள்ளி, படித்துறை யையும் பாராமரிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை துறைத்தலைவர் சுதாகர் இந்த மண்டபத்தில் குறிக்கப்பட்டு நீங்கள் சொன்னது போன்று 425 வருடம் பழமையானது அல்ல? 125 வருடம் பழமையானதுதான் என்று கூறினார்.
அதையும் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஏன் என்றால் தொல்லியல் துறையில் கல்வெட்டு படிக்க இவர்கள் தங்களது மாணவர்களுக்கு முறைப்படி பயிற்சி கொடுத்து வருகிறார்கள். எனவே இவர்கள் ஆய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டியதே உள்ளது.
ஆனாலும் இந்த மாணவர்கள் மீண்டும் இங்கே வந்து மீண்டும் ஆய்வு செய்யவேண்டும். வேறு ஏதாவது கல்வெட்டு இருக்கிறதா? என கண்டு பிடிக்க வேண்டும்.
ஏன் என்றால் 125 வருடம் என்பது ஆங்கிலேயர் ஆட்சி காலம். அந்த காலத்தில் கோட்டைகள் எல்லாம் இடிக்கப் பட்டு பாலங்கள் கட்டவும் அணைகள் கட்ட பயன்படுத்தி வந்தனர். நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் இதுபோன்ற பிரமாண்டமான மண்டபம் கட்டப்படும். எனவே இந்த மண்டபத்தின் காலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தையதாகத் தான் இருக்கும் என்பது என் கருத்தாகும்.
இந்த ஊரில் உள்ள கோயிலை இடித்து கான்சாகிப் அணைக் கட்டிய கல்வெட்டை யெல்லாம் கண்டு பிடித்து தந்தவர்கள் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் மாணவ மாணவிகள்தான் . ஆகவே தான் அவர்கள் சம்பந்தப் பட்ட இடத்தில் வந்து இந்த மண்டபத்தினை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
இந்த இடத்தில் மண்டபம் முன்னால் அருமையான தீர்த்தக்கட்டம் உள்ளது. இங்கு நான் இறங்கி குளித்தேன். படித்துறை புதர் மண்டி கிடந்தது. ஏற்கனவே பெருமாள் அய்யா இங்கே ஆடி மற்றும் தை மாதம் அமாவாசை பூஜை நடக்கும் என கூறியிருந்தார். ஆனால் இந்த இடம் தற்போது குளிப்பதற்கே உகந்ததாக இல்லாமல் உள்ளது. குளிக்கும் போது ஆற்றில் பரப்பில் நிறைய சகதிகள் இருந்தது.
கடந்த டிசம்பர் 6 , 2023 வெள்ளத்தின் போது அடித்து வரப்பட்ட சகதிகள் தற்போதும் தாமிரபரணி ஆற்றில் உள்ளது என்பதை அறிய முடிந்தது. ஆற்று மணல் மட்டும் இருந்திருந்தால், இதுபோன்ற சகதி கள் ஆற்றின் அடியில் தேங்கி நிற்க வாய்ப்பே இல்லை.
என்ன செய்வது தாமிரபரணி ஆற்றில் இருந்து எடுத்த மணலை இனி எப்போது சேர்க்கப்போகிறோம். பழைய காலங்களில் ஆற்று மணல் படிந்து கிடக்கும் தாமிரபரணியை எப்போது காணப்போகிறோம்.
இந்த இடத்தில் உள்ள ஊற்றுகள் குறித்து பேசும் போது அருகில் உள்ள முன்னீர் பள்ளத்தில் மூன்று ஊற்று உள்ளது என்று தலபுராணத்தில் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
ஆம் ஊற்று நீர் , வேற்று நீர், ஆற்று நீர் . இந்த மூன்று இடமும் சேரும் இடம் தான் முன்னீர் பள்ளம். அதாவது மூன்று + நீர் = முன்னீர் என்று கூறுவதாக முன்னீர் பள்ளம் சிவன் கோயில் தலபுராணம் கூறுகிறது. அதைப்பற்றியும் இந்த இடத்தில் பதிவிடுவது அவசியமாகும்.
இந்த வேளையில் தருவை சிவன் கோயிலை பற்றி நமக்கு சில தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலை எனது நண்பரும் பத்திரிக்கையாளருமான தருவை பிச்சுமணி அவர்கள் தந்தார்கள்.
இதற்காக அவர் கோயிலுக்கு எடுத்து வீடியோ தொகுப்பு ஒன்றை என்னிடம் கொடுத்தார். அதில் இருந்து சிவன் கோயில் வரலாற்றை பேசுவோம்.
( நதி வற்றாமல் ஓடும்)


