முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 9 வது நாள் திருவிழா நடந்து வருகிறது.
இதற்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசையில் நின்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதே போல் திருச்செந்தூர் வருகை தந்த சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் குதூகலமாக குளித்தும், உற்சாகமாக கடலில் நடனமாடியும் நேரத்தையும் பொழுதையும் கழித்து வருகின்றனர்.
விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோவில் வளாகப்பகுதி, நாழிக்கிணறு, கடற்கரை பகுதி, பேருந்து நிலையம், வள்ளிகுகை என திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.


