திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து இன்று (01.07.2025), மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற 07.07.2025 அன்று வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான வேள்விச்சாலை பூஜைகள் 01.07.2025 முதல் நடைபெறுகிறது. எனவே, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்து வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடியிலிருந்து சாலை மார்க்கமாக வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக வீரபாண்டியபட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட ஜே.ஜே. நகர் செல்லும் வழியில் உள்ள கல்லூரி விடுதியின் எதிர்புறத்திலும், ஜே.ஜே. நகர் பகுதியிலும், திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரில் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்கள், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக மண் திட்டுகளை பவர் ரோலர் வாகனங்களை பயன்படுத்தி சமன் செய்திடவும், மேலும், பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரைகள், தேவையான அளவில் நிழற்பந்தல்கள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துமிடங்களிலிருந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக மிகைநீர் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அதேபோன்று, திருநெல்வேலியிலிருந்து சாலை மார்க்கமாக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக வேட்டைவெளிமடம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையத்தினையும், தொடர்ந்து, கன்னியாகுமரி – நாகர்கோவிலிருந்து சாலை மார்க்கமாக வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக செந்தில் குமரன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துடத்தினையும் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் குடோன் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் அகன்ற எல்இடி திரைகள், தேவையான அளவில் நிழற்பந்தல்கள், இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் தேவையான இடங்களில் எல்இடி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், பக்தர்கள் அன்னதானம் வழங்குவதற்கு ஏதுவாக அருள்மிகு செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சமையல் செய்யும் இடத்தில் நிழற்பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து திருப்பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்கள். திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், அகன்ற எல்இடி திரைகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தினையும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் (நிலஎடுப்பு, உடன்குடி), திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளர் கண்மணி, நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


