தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடங்கியுள்ள 150 கண்காணிப்பு கேமராக்களை உடனடியாகச் சீரமைக்கக் கோரி, ‘எம்பவர் இந்தியா’ நுகர்வோர் அமைப்பு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘எம்பவர் இந்தியா’ நுகர்வோர் கல்வி, ஆராய்ச்சி மையம் செயல் இயக்குனர் ஆ. சங்கர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் தற்போது முற்றிலும் செயலிழந்து காணப்படுகின்றன.
மாநிலத்தின் மிகவும் பதற்றமான நகரங்களில் ஒன்றாகத் தூத்துக்குடி கருதப்படுவதால், மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்பு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி, இவற்றை மிகக் கூடிய விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர மருத்துவமனை நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனைக்குத் தங்குதடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, அங்குச் சூரிய ஆற்றல் வசதியை உருவாக்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைத் தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் மக்கள் சேவையை மேம்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோயாளி நலச் சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழுவை உடனடியாக அமைக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகுந்த முறையில் அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


