செய்துங்கநல்லூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 1.25 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று (06.04.2022) செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்த அங்கப்பன் மகன் முத்துபாண்டி (21) என்பதும், அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முத்துபாண்டி மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கூட்டுகொள்ளை வழக்கும், ஒரு கஞ்சா வழக்கும் என 2 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


