செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தினை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் அங்குள்ளவர்களைக் கோயிலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.
இன்று காலை முதலே பெய்த மழையில் பல குளங்கள் நிரம்பின. குறிப்பாக மணிமுத்தாறு பாசனம், தெற்குகாரசேரி குளம், கிளாக்குளம் ஆகிய குளங்கள் நிரம்பி மறுகால் விழுந்தது. இதனால் தண்ணீர் மருதூர் மேலக்காலில் கலக்கும் இடத்திலும் வெள்ளம் அதிகமாக வந்த காரணத்தினால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கிளாக்குளம் மேலத்தெரு, வடக்கு தெரு, கீழத்தெரு,மேலத்தெரு, குருக்கள் கோட்டை போன்ற பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதற்கிடையில் தாதன்குளத்தில் இருந்து கிளாக்குளத்துககு ரயில்வே லைன் கீழே அமைந்து இருந்த சுரங்கப் பாதை மீண்டும் தண்ணீரில் மூழ்கியது. அதுபோலவே மங்கம்மாள் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது ஓடிய காரணத்தினால் சாலை துண்டிக்கப்பட்டது.
இதனால் கிராம மக்கள் வல்ல குளம் ,தெற்கு காரசேரி வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் கூடுதலாகச் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மாலையில் வல்ல குளம் & தெற்குகாரசேரி சாலையில் உள்ள தாம்போதியில் தண்ணீர் மூழ்கிய காரணத்தினால் கிளாக்குளத்து மக்கள் அரசர் குளம் வழியாக மேலும் 7 கிலோ மீட்டர் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கிளாக்குளம் மற்றும் குருக்கள் கோட்டை மக்கள் மிகவும்பாதிகப்பட்டனர்.
இதற்கிடையில் கிளாக்குளத்தில் உள்ள மக்கள் பிரச்சனையைக் கேள்விப் பட்ட கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நயினார், ஒன்றிய அலுவலர் முருகன், தெற்கு காரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு, கருங்குளம் பஞ்சாயத்து எழுத்தர் தங்கம்மாள், தெற்குகாரசேரி பஞ்சாயத்து கிளார்க் முருகன் ஆகியோர் கிளாக்குளம் வந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்த மக்களை அழைத்து வந்து வெங்கிடாசலபதி கோயிலில் தங்க வைத்தனர். அவர்களுக்குத் தேவையான உணவுகளை கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் ஏற்பாடு செய்தார். மேலும் தொடர்ந்து வெள்ளம் வராமல் இருக்க அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதே போல் கால்வாய் கிராமத்திலும், தெற்குகாரசேரி கிராமத்திலும் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. ஸ்ரீ வைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மழையால் சேதம் ஏற்படாமல் இருக்க அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த பகுதி மக்கள் பயத்துடனேயே இருக்கிறார்கள்.
—