கருங்குளம் அருகே உள்ளது கிளாக்குளம். இந்த கிராமத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதித்தனர். இதற்கிடையில் பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. எனவே வீடு இடிந்து விழுந்து ஏதாவது உயிர்ச் சேதமாகிவிடக்கூடாது என்று அங்குள்ள மக்களை வெளியே வந்து முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த வீட்டில் வசித்தவர்கள் வெளியே வரவில்லை. இதற்கிடையில் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் அருள், சேரகுளம் சப் இன்ஸ்பெக்டர் அல்லி ராஜன், தெற்கு காரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு உள்பட அதிகாரிகள் அவர்களை வெளியே வரவழைத்து முகாமில் தங்க வைத்தனர்.
இதற்கிடையில் கிளாக்குளம் இந்து ஜெயலெட்சுமி நடுநிலைப்பள்ளி கட்டிடச்சுவர் இடிந்து விழுந்தது. இயற்கனவே பள்ளிக் கட்டிடம் சரியில்லை எனப் பள்ளி மாணவ மாணவிகளைக் கடந்த மாதம் தான் வேறு இடத்துக்கு மாறி சென்றிருந்தனர். தொடர்ந்து மழை தண்ணீர் இந்த ஊருக்குள் நுழைவது அதிகரித்து வருவதாலும், தொடர்ந்து மழை பொழிவதாலும் ஸ்ரீ வைகுண்டம் தீயணைப்பு படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.