மாணவப் பருவம் தான் குழந்தைகளின் முழு வாழ்விற்குமான அடித்தளம்.அதில் சற்று நாம் கவனம் செலுத்தி சீர்படுத்தினால் அதன் வளர்ச்சிப்பாதையை இளம்பருவத்திலிருந்தே ஆரோக்கியமானதாக்கி விடலாம்.
ஆனால் இந்தப் பாதை மிகக் குறுகலாதாகவோ அளவற்று அகன்றதாகவோ அமைந்துவிடுமேயானால் வளர்ச்சியில் தடை அல்லது தேக்கம் ஏற்படும்.
சுதந்திரம்_
*****
குழந்தைப் பருவத்தினரின் மனம் கட்டுபாடற்ற சுதந்திரத்தையே விரும்பும்.எப்போதும் விளையாட்டுத்தனத்தோடும் மனம்போன போக்கிலும் நடந்துகொள்ளவே விரும்புவர்.
அந்த அவர்களது விருப்பத்தை நெறிப்படுத்தினோமானால் சரியான மனப்பான்மையை அவர்களுக்குள் வளர்க்க முடியும்.
சுதந்திரமான மனப்பான்மையிலிருந்துதான் குழந்தைகளின் முழுத் திறமைகளும் வெளிப்படமுடியும். ஆனால் அவர்களால் தங்களுக்கான சுதந்திரத்தின் எல்லையை வகுக்க இயலாது.அதை அவர்களுக்கே தெரியாமல் நாம்தான் வகுத்தாக வேண்டும்.
“கட்டுப் பாடுகளோடு கூடிய சுதந்திரமே நிரந்தரமானது” என்று சொல்லிப் பாருங்கள்… “கட்டுப்பாடுகள் வந்த பிறகு அங்கே சுதந்திரம் எங்கே இருக்கும்?” என்பார்கள்.
எப்போதும் அவர்களை அதைச் செய்யாதே, இதை எடுக்காதே, அங்கே செல்லாதே,விளையாடாதே….
என்பனபோன்ற அவர்களது இயல்பிற்கு முரணான அடக்குமுறைகளையே கையாண்டோமானால் அவர்களது விரக்தியின் வெற்று நேரங்களை வேண்டாத வெறுப்புணர்ச்சி நிரப்பிக் கொள்ளும்.
இன்றும் சில பள்ளிகளில் குழந்தைகள் வகுப்பறைகளில் மட்டுமல்ல கழிவறைக்குச் செல்லும் போதும்கூட ‘முழு வகுப்பும் வரிசையாக கழிவறை வரை (பின்புறம் கைகளைக்கட்டிக் கொண்டு) சென்று பின்னர் அதே வரிசை மாறாமல் வகுப்பறைக்குள் வந்து சேர வேண்டும்’ என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர்.இதை ஆகச்சிறந்த ஒழுக்கநெறியாக கருதும் போக்கு
ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் இருப்பதுதான் வியப்பு.
கல்வியாளர்களிடமிருந்து எத்தனை அறிவுரைகளை கேட்டாலும் இன்னும் பள்ளிகளில் மாணவர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும்
விளையாட்டு நேர வகுப்புகளை ஈவு இரக்கமின்றி பாடவேளைகளாக்கிக் கொள்ளும்
நிலை இருந்து கொண்டுதான் இருக்கிறது.பிறகு எப்படி பள்ளிச் சூழல் அவர்களால் விரும்பப்படும்..?
வாரத்திற்கு இரண்டு பாடவேளை மட்டுமே விளையாட்டிற்கானது. அதற்காகவே காத்துக் கிடக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் அதீத மதிப்பெண் ஆசையால் அவர்களுக்கு நன்மை செய்வதாகவே எண்ணிக் கொண்டு இத்தகைய புரிதலற்ற செயல்களைக் காலங்காலமாக செய்துவருவது வருந்தத்தக்கது.
ஒருசில ஆண்டுகளுக்குமுன்பு நான் பணியாற்றிய பள்ளியில் ஒரு வகுப்பில்( எட்டாம் வகுப்பு) இரண்டு மாணவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வருகைத் தந்திருந்தனர்.சில மாதங்களாகவே இந்நிலைத் தொடர்ந்தது. அவர்களை மற்ற நாட்களில் பள்ளிக்கு வரவைக்கவே முடியவில்லை. ஆசிரியர்களால் அவர்களை எவ்வகையிலும் கண்டிக்க முடியாத சூழல்.பள்ளியில் மாணவர் பற்றாக்குறை வேறு. அவசரப்பட்டு வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிடக் கூடாதென்ற பயம்..! இந்நிலையில் பெற்றோர்களும் ‘ஓரளவிற்கு மேல் கண்டித்தால் வீட்டை விட்டே ஓடிவிடுகிறான்’ என்றனர்.
நான் அவர்களது வருகைப் பதிவேட்டைக் கவனித்த போதுதான் புரிந்தது( எனது வகுப்பு அல்ல) அவன் விளையாட்டுநேர வகுப்பு இருந்த
இரண்டு நாட்கள் மட்டுமே நண்பர்களான அவ்விவரும் பள்ளிக்கூடத்திற்கு வருகைத் தந்திருக்கின்றனர் என்பது தெரியவந்தது. அன்போடு விசாரித்ததில் ஒத்துக் கொண்டு கண்கலங்கி நின்றனர்.
இனி தினமும் ஒரு பாடவேளை உங்களுக்கு விளையாட்டு மைதானத்திற்குச் சென்று விளையாடிவர அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறியதும் மகிழ்ச்சியடைந்தனர்.அதன் பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆலோசனைகளைக்கும் விருப்பத்தோடு செவிசாய்த்தனர். அதன்பிறகு அவர்கள் விடுப்பு எடுப்பது படிப்படியாகக் குறைந்தது. ஒருசில வாரங்களில் இயல்புநிலைக்கும் திரும்பிவிட்டனர்.
பலவிதமான குடும்பச் சூழலில் இருந்து வேறுபட்ட மனநிலையோடு வரும் குழந்தைகளுக்கு ஒரேவிதமான பள்ளிச் சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும்…!? நாம்தான் ஏற்றவிதங்களில் அதைத் தளர்த்திக்கொள்ள வேண்டும்.வளையாத சட்டங்களும், அவை சார்ந்த திட்டங்களும் எவ்வகையிலும் இளங்கன்றுகளைப் போல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் குழந்தைகளுக்குப் பயன் தராது.
தினமும் எட்டுமணிநேரம் குழந்தைகள் பாட அறிவு ஒன்றே கல்வி என்ற புரிதலில் மன உளைச்சலோடு இருப்பார்கள் என்றால் மன இறுக்கத்தை அடைய மாட்டார்களா?
குழந்தைப் பருவத்தைக் கடக்கும்வரை பெற்றோரும், அதற்கு அடுத்தநிலையிலுள்ள ஆசிரியர்களும் குழந்தைகளாகவே மாறி
அவர்களைப் புரிந்து கொண்டால் மட்டும்தான் கல்வியின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் .
உயர்ந்த கல்விக் கற்றும் பண்பற்று வாழும் மனிதர்களை “இவ்வளவு படித்திருந்தும் இப்படி அறிவற்று நடந்து கொள்கிறாயே…!?”
என்னும் கேள்வி தினமும் எங்காவது ஒரு இடத்தில் கேட்கப்பட்டுக் கொண்டே இருப்பதை அறிவோம்.இதற்கு முக்கியமான காரணம்….இத்தகையவர்கள் பாட அறிவை மட்டும் உடையவர்களாக இருந்து அதில் வெற்றி பெற்றிருப்பார்கள்.வெறுமனே இப்பாட அறிவைப் பெற குறைந்தப்பட்சம் அவர்களது மனப்பாடத் திறனும், ஆர்வமும் போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களுள் பலர் வேறெந்த வாழ்க்கைக் கல்வியையும் அறிந்திருக்க மாட்டார்கள். இத்தகையோர் தங்களது ஏட்டு அறிவை பிறரோடு ஒப்பிட்டு தங்களை ஒருவித அசட்டுத்தனமான பெருமிதத்தில் வைத்திருப்பார்கள்.அதீத தன்னம்பிக்கையும், பிறருடைய உணர்வுகளைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் செயல்படுவர்;பிறருக்கு பெருந்தொல்லையாகவே இவர்களால் நடந்து கொள்ள முடிகிறது.
ஏதோவொரு வழியில் ஏட்டுக் கல்வித்தகுதியின் அடிப்படையில்
சமூக அந்தஸ்தைப்பெரும் இத்தகையோர் வேலைவாய்ப்புகளிலும் முதன்மையான இடங்களைப் பிடித்து வேலை தளங்களிலும் தங்களது அறியாமையைக் கொப்பளித்துக் கொண்டிருப்பா்.
இதனால் உடன் பணியாளர்கள் அத்தனைபேரும் நிம்மதியை இழந்து நிலைகுலைந்து
நிற்க வேண்டியதிருக்கும். இதற்கான காரணம் அவர்கள் குழந்தைப் பருவம் முதலே நெறிப்படுத்தப்படாமை தான்.
மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும், சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளவும் அவ்வப்போது ஏற்ற இடங்களில் அறிவுருத்தப்பட வேண்டியது குழந்தைப் பருவத்திலிருந்தே அவசியமானது.
ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் தனித்தனித் திறமைகளும், ஆற்றலும் புதைந்து கிடக்கின்றன.அவற்றை முழுமையாக வெளிக்கொணர வைப்பதே கல்வியின் நோக்கம்.


