
அறுபதுகளில் பயணம் செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அய்யா அவர்களின் பக்குவப்பட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பை, இன்றைய நவீன காலக்கட்டத்துடன் இணைந்து மிகவும் விறுவிறுப்பான ஒரு திரைப்படத்தை காண்பது போல இந்த நாவலை எழுதியுள்ளார். சமூகத்தின் இன்னல்களை எதார்த்தமாக நகர்த்தியிருக்கும் முத்துக்கிளி புதினமானது, அந்த புத்தகத்தில் இருக்கும் “முத்துக்கிளி” கதாபாத்திரத்தைப் போலவே எந்த காலக்கட்டத்திலும் நிலைத்து நிற்கும்.
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மறுபடியும் வெல்லும்” என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக, எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக நம் கண் முன் காட்சிபடுத்தியிருப்பது ஆசிரியரின் எழுத்துக்கு மிகப்பெரிய பலமாகும்.
கதையின் நகர்விலேயே சின்னச் சின்ன சம்பவங்களை கூட தெளிவாக சித்தரித்தரிப்பது படிப்பவரை வெகுவாக ஈர்க்கிறது. சான்றாக திருநங்கைகளைப் பற்றி குறிப்பிடும் போது சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற பொன்னி அக்காவை பற்றி விவரிக்கும் இடங்களிலும் சரி, மொபைல் மூலமாக ஒருவரது வசிப்பிடத்தினை கண்டுபிடிக்கும் நவீன யுக்தியினை கூறும் இடங்களிலும் சரி மிக வித்தியாசமாக கதை சொல்லியுள்ளார். நமது கவனத்தை கதைக்களத்துடன் இணைத்தோடு மட்டுமல்லாமல் அவர் அறிந்த, பலரும் அறியாத விசயங்களை நம்மிடம் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பாக உள்ளது. அதிலும் குறிப்பாக பம்பாய் நகரத்தின் சாலைகளை விவரிப்பதோடு, விறுவிறுப்பான கதையை அவ்விடத்தில் திருப்பங்களுடன் கடக்கும் ஒவ்வொரு நொடியும், நம் மனதிலும் அடுத்து என்ன என்று விறுவிறுப்பை ஏற்படுத்துகிறார். அடுத்து என்ன நடக்கும் என திரைப்படத்தினை பார்ப்பது போலவே கதை நகருகிறது.
நவீன் என்ற இளம் வயது பையனுடைய மனதில் பூனை மீது இருக்கும் கருணையை வெளிப்படுத்தும் ஆசிரியர், அவனை குழந்தையாக காட்டி விட்டு மறுநிமிடமே அவனது புத்தி சாதுர்யத்தையும் கதையில் காட்டியிருப்பது தற்போது வாழ்ந்து வரும் இளைஞர்களுக்கும் செல்போனுக்குமான இணைப்பை கூறுகிறது. யாருமே எதிர்பார்க்காத திருப்புமுனைகளுடன் கதை நகருகிறது.
“சரியான லூசு குடும்பமா இருக்குமோ” போன்ற வசனங்களில நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. சிறு வயது காதலியை காண மும்பை செல்லும் வாசு ஆசை ஆசையாக வாங்கிய வெங்காயம் நறுக்கும் கத்தி, மதுரை விமானநிலையத்தில் பாதுகாப்பு அலுவலர்களால் பறி போகும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியாது. திருநங்ககைளின் வாழ்க்கையை விவரிக்கும் இடங்களில் சோகத்திற்கும் குறைவில்லை.
வாசு என்ற காதாபாத்திரம் தனது அறுபதுகளில், இளம் வயதில் மலர்ந்த அழகான காதலை சுசிலாவிடம் விவரிக்கும் விதமும், அதனை அவர் ஆமோதிக்கும் விதமும் நம்மை ஒரு தெளிந்த நீரோடையின் அருகில் பயணம் செய்யும் உணர்வினை ஏற்படுத்துகிறது.
தந்தைக்கும் மகளுக்குமான அன்பு, சகோதரிப் பாசம், வாயில்லா ஜீவன்களின் மேலிருக்கும் அன்பு, வயோதிகத்திலும் தொடரும் வாலிபக் காதலின் பரஸ்ப்ரமான அன்பு, திருநங்கைகளின் மதிப்புக்குரிய தாய்மை உணர்வு, மகள் பாசத்துக்காக ஏங்கி கொலை காராக மாறும் மனஅழுத்தம் கொண்ட தம்பதிகள் என ஒவ்வொரு பாத்திரங்களிலும் முத்திரை பதிக்கிறார் ஆசிரியார். பல இடங்களில் ஆசிரியரின் வரிகளில் விவரிக்க முடியாத வியப்பு ஏற்படுகிறது. தெருபாவை கூத்து பற்றி விவரிக்கும் இடங்களில் எனது தந்தையில் கால கட்டத்துக்கு எங்களை கொண்டு சென்றது போலவே இருந்தது. அது நாங்கள் எல்லாம் காணாத உலகம்.
மொத்தத்தில் முத்துக்கிளியானவள் தூத்துக்குடி முத்தை போன்று அழியாத சொத்தாகி விட்டாள். சுப்பிரமணி என்ற கதாபாத்திரம் நாவலை படித்து முடித்த பிறகும் நம்மோடு பல நாள்கள் பயணித்துக்கொண்டே இருக்கிறது.
முத்துக்கிளி புதினமானது அழியாத காவியமாக, இலக்கிய உலகில் நிச்சயம் நிலைத்து நிற்கும். வரலாற்றை எழுதிக்கொண்டிருந்த முத்தாலங்குறிச்சி காமராசு அய்யா இந்த நாவலை எழுதியுள்ளார் என்று கூட ஆச்சரியப்பட வைக்கிறது. அய்யாவை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன் – எழுத்தாளர் ஏ.சாந்தி பிரபு, தூத்துக்குடி
04/07/2025


