தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக விவசாயமும் கால்நடையும் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியது. அநேகமான ஆடு மாடு மற்றும் கோழிகள் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டன. மேலும் கடும் மழை தண்ணீர் தேக்கம் காரணமாக கால்நடைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின. நோய் மற்றும் சரியான உணவு கிடைக்காததால் பசுவில் இருந்து கிடைக்கும் பாலின் அளவு குறைந்து விவசாயிகள் பெரும் இழப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு கால்நடை உதவி இயக்குனர் செல்வகுமார் திருச்செந்தூர் கோட்டம் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஆழ்வார்த்திருநகரி கால்நடை மருத்துவர் சுரேஷ் அவர்களின் தலைமையில் உள்ள மருத்துவக்குழு நவலட்சுமிபுரம், திருக்கலூர், மழவராயநத்தம் மற்றும் செம்பூர் கிராமங்களில் கால்நடைமுகம் நடத்தினர். முத்தையாபுரம், பன்னம்பாறை போன்ற கிராமங்களில் கால்நடை மருத்துவர்கள் ராகவி, பத்மநாபன், நல்லதம்பி அடங்கிய மருத்துவர் குழு கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தினர். இதில் ஆட்டுக்கொல்லி நோய்க்கான தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும் காய்ச்சல், குடல் சம்பந்தமான நோய்கள், கால் குழம்பில் உள்ள புண்கள், காயங்கள், உண்ணிகள், மடிவீக்க நோய், தோல் வியாதிகள் மற்றும் குடல் புழு நீக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. இந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


