சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒரு துறையாக செயல்பட்டு வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில் மண்டல அளவிலான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தொண்டு நிறுவனங்களின் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சி போட்டிகள் 2023-24 இன்று(19.10.2024) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருவை விளையாட்டு மைதானத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன், தெரிவித்ததாவது: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தொண்டு நிறுவனங்களின் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொரு மண்டல அளவிலும் நடைபெற்று பின்பு மாநில அளவிலான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. முதலில் இந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்களில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்தது. கடந்த முறை தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களின் மாணவர்களையும் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டே தொண்டு நிறுவன மாணவர்களும் போட்டிகளில் பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளனர்.
நம் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு வெறுமனே புத்தக படிப்பு மட்டுமில்லாமல் அவர்களிடமுள்ள அனைத்து திறமைகளையும் வெளிக்காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக மாணவர்களுக்கு நடனப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது. இல்லங்களில் உள்ள மாணாக்கர்கள் தாய், தந்தை அரவணைப்போடு வளர்ந்திட வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து வருகிறோம். தாய் தந்தை இல்லாமல் ஆதரவற்ற ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்க முன் வந்தால் அதற்கான வசதிகளை ஏற்படுத்தி குடும்ப சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த குழந்தைகளின் நலனுக்காக நிதி ஆதாரத் திட்டம் என்ற திட்டத்தின் மூலம் மாதம் 4000 ரூபாய் இந்த குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இதுவரை 399 மாணவர்களுக்கு நிதி ஆதாரத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்கு என்று அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்பட்டு வருகிறது.
நம்முடைய முதலமைச்சர் தளபதியார் குழந்தைகளின் நலனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்து, குழந்தை நேய தமிழகமாக இருந்திட வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசு இல்லங்களில் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கட்டிடங்களை அமைத்து வருகிறார்கள். நமது தட்டப்பாறை குழந்தைகள் இல்லம் கூட பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5,00,000 வைப்புத் தொகை வைத்துள்ளதுடன் மட்டுமல்லாமல் மாதம் ரூ.3000 பராமரிப்புச் செலவிற்கும் வழங்குகிறது நம்முடைய தளபதியாரின் தலைமையிலான அரசு. கொரோனாவினால் தந்தையையோ அல்லது தாயையோ இழந்த குழந்தைகளுக்கு ரூ.3,00,000 வைப்புத் தொகையும் பராமரிப்புத் தொகையும் அளித்து பராமரித்து வருகிறது.
எங்குமே தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை, பராமரிப்பு இல்லை என்கிற நிலை அறவே இருக்க்க் கூடாது. எல்லாக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பும், பராமரிப்பும் கொடுக்க வேண்டும். தரமான கல்வியை வழங்க வேண்டும். நல்ல ஒரு எதிர்கால சமுதாயம் உருவாகிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நம்முடைய முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலில் இத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மண்டல அளவிலான விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைக்கும் விதமாக தேசிய கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டு, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைத்தார் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் .
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒலிம்பிக் கொடியினை ஏற்றி வைத்தார். இந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, இராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 1200 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மாணவ மாணவியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் சி.மதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் லூ.அலெக்ஸ், துணை இயக்குநர் ச.சூர்யகலா, குழந்தைகள் நலக்குழு தலைவர் தூத்துக்குடி செ.ரூபன்கிஷோர், என்.எல்.சி. தலைமைச் செயல் அதிகாரி க.அனந்தராமானுஜம், மண்டல மேலாளர் பாரத் ஸ்டேட் வங்கி ஆ.ஆல்வின் மார்டியன் ஜோசப், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மாநில உறுப்பினர் ச.சொர்ணலதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சு.அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சு.கண்ணதாசன், தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் த.பாண்டியன் ஆகியோர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


