சுருதிஹாசன் (சனவரி 28, 1986) பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.
சுருதிஹாசன் 1986, சனவரி 28 இல் சென்னை நகரில் பிறந்தார்.சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், மும்பைகல்லூரியில் உளவியலும் முடித்தார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.
இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது. 2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.
2009-ம் ஆண்டு வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு சுருதிஹாசன் இசை அமைத்தார். இதுவே இவர் இசை அமைத்த முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்திற்கு இவரும் ஒரு துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றினார்.


