தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
தலைமை இயந்திர பொறியாளர் சுரேஷ் பாபு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை துறைமுக தீயணைப்புப் படை, துறைமுக பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.அவர் தனது குடியரசு தின விழாவின் சிறப்புரையில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ரூபாய் 7055.95 கோடி செலவில் வெளிதுறைமுகம் அமைக்கும் திட்டத்தில் 1000 மீட்டர் நீளத்துடன் கூடிய இரண்டு சரக்குபெட்டக முனையங்களை அமைப்பதற்கு மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது குறிப்பிட்டத்தக்கது. மேலும் தென்தமிழகமான கன்னியாகுமரி மாவட்டம் முதல் இராமநாதபுரம் மாவட்டம் வரையிலான கடல் பகுதிகளில் காற்றாலை மின்நிலையங்கள் அமைபெற உள்ளன.
இவ்வாறு அமைய பெறும் காற்றாலை நிலையங்களுக்கு தேவைப்படும் காற்றாலை இயந்திரங்கள் மற்றும் இறகுகளை கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மேற்கொள்ளும் என்று கூறினார். துறைமுக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சிறப்பான பணி, தொழிற்சங்களின் ஒத்துழைப்பு மற்றும் துறைமுக உபயோகிப்பாளர்களின் சீரிய செயல்பாட்டிற்கு நன்றி தெரிவித்ததுடன், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
தென்தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை உரிய நேரத்தில் விநியோகம் செய்வதற்கு உதவிய துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் அகில இந்திய பெருந் துறைமுகங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவின் இறுதியாக துறைமுக பள்ளிகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல்வேறு பாதுகாப்பு செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினார்கள்.


