தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்திட ‘இடுக்கண் களைவோம்” இணையதளத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பு செய்திட மாவட்டத்திலுள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக ‘இடுக்கண் களைவோம்” என்ற இணையதளத்தை பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்கள்.
பின்னர் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023 மற்றும் 18.12.2023 அன்று பெய்த அதிகன மழையின் காரணமாக தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருக்கும் குடியிருப்பு பகுதிகள், அரசு கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், மருத்துவமனை உபகரணங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் சேதடைந்துள்ளது.
இந்த பாதிப்புகளை சீரமைப்பு செய்திட மாவட்டத்திலுள்ள பெரு நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவதற்காக Thoothukudi District Administration society உருவாக்கப்பட்டு அதன் மூலம் ‘இடுக்கண் களைவோம்” என்ற இணையதளம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு மாநில அரசு மூலம் ஒரு திட்டத்தை தந்திருக்கிறார்கள். விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்கள். அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கு உதவ விரும்பும் நிறுவனங்களுக்காக ‘இடுக்கண் களைவோம்” என்ற இணையதளம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையினர் அதிக முக்கியத்துவம் தந்து இந்த இணையதளத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதனை ஒரு சமூக சேவையாக நினைத்து நீங்கள் செய்ய வேண்டும். ஏனென்றால் இந்த இணையதளம் குறித்து நிறைய பேருக்கு தெரிந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இன்று ‘இடுக்கண் களைவோம்” இணையம் துவக்கப்பட்டுள்ளது. தொண்டுள்ளம் கொண்ட நிறைய பேர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முன்வருவார்கள்.
இந்த இணையதளம் செயல்பாடு வெற்றிகரமாக அமையும். பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். தூத்துக்குடி இடுக்கண் களைவோம் நிவாரணத்திற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 இலட்சம் வழங்கிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக இன்று ‘இடுக்கண் களைவோம்” என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் பயன்பெற்று மகிழ்ச்சி அடையும் வகையில் அனைவரும் செயல்படுவோம் என மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தூத்துக்குடி மற்றும் ஏரல் வட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 7 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர்களுக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பிலான 7 கிரைண்டர்களை வழங்கியுள்ளார்கள்.
இந்த கிரைண்டர்களை மகளிர்களுக்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி வழங்கினார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி இடுக்கண் களைவோம் நிவாரணத்திற்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், சுகாதார நிலையங்களை சீரமைப்பதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ.9.58 இலட்சத்திற்கான காசோலையினை துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அவர்களிடமும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


