ஸ்ரீவைகுண்டம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது. பந்தயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய மாட்டு வண்டிகள்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
14 பெரிய மாட்டு வண்டிகள், 16 சிறிய மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட இந்த மாட்டு வண்டிகள் பந்தயத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கொடி அசைத்ததும் மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
மாட்டு வண்டிகள் பந்தயத்தை காண ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் காண வருகை தந்தனர்.
முன்னதாக போட்டி தொடங்கிய இடத்தில் பெரிய மாட்டு வண்டிகள் பந்தயத்தின் போது ஒன்றன்பின் ஒன்றாக மாட்டு வண்டிகள் மோதியது. இதில் இரண்டு மாட்டு வண்டிகள் சுக்குநூறாக நொறுங்கியது. மாட்டு வண்டியை ஓட்டிய இருவர் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


