காமநாயக்கன் பட்டிக்கு பெருமை சேர்ந்த வீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 இல் இவர் பிறந்தார். பெப்ரவரி 4, 1747 இல் இவர் இறந்தார். இவரது இயற்பெயர் கான்சுடான்சோ பெசுக்கி என்பதாகும். இவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது வயதில் வருகை தந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.
இவர் இந்தியாவுக்கு 1710 சூனில் கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.
சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; அப்போது மதுரை மறைமாவட்டத்தில் இருந்த காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் பாளையக்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர். கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னை மேரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னைக்குப் பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார் வீரமாமுனிவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டி உள்ளார்.
இவர் கட்டியுள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. இவர் கட்டி எழுப்பியுள்ள ஆலயத்திற்குல் ஐம்பது பேர் மட்டுமே அமரலாம். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள ஆண்டிப்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கீத்தேரி மாதா ஆலயமும் இவர் கட்டியதே.
காமநாயக்கன் பட்டிக்கு பெரிதும் பங்காற்றியவர். இவர் காலத்தில்தான் காமநாயக்கன் பட்டியில் தேர் ஓட ஆரம்பித்தது. அவர் காலத்து தேர் தற்போதும் காமநாயக்கன் பட்டியில் உள்ளது.
அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று “????” சேர்த்தெழுதுவது வழக்கம். “ஆ” என எழுத “அர” என 2 எழுத்துகள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி “ஆ, ஏ” என மாறுதல் செய்தவர் இவர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும்.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம்,
ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதைஆகிய நூல்களைப் படைத்தார்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். 1728-இல் புதுவையில் இவரின் “பரமார்த்த குருவின் கதை” என்ற நூல் இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெசுக்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
ம
இவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புள்ளது.
1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-&47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746&-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம் &
வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் “வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் பரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்” எனக் குறிப்பிடுகிறார்.
எது எப்படியோ, இன்று தமிழக அரசு காமன் நாயக்கன் பட்டியில் அவருக்கு நினைவிடம் எழுப்பியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் அவருடைய திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுவோம்.


