செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகள் பயன்படுத்தும் வயற்காட்டுக்கு செல்லும் இடத்தில் உள்ள வடிகால் மீது பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் தூதுகுழி வடிகால் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் 7 வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டில் பிரியும் மருதூர் மேலக்காலில் வெள்ளக்காலங்களில் உபரி தண்ணீரை இந்த கால்வாய் வழியாகத்தான் திறப்பார்கள். உபரி தண்ணீர் முத்தாலங்குறிச்சிக்கும் & கருங்குளம் கிராமத்துக்கு இடையில் உள்ள தாமிரபரணியில் கலக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட வடிகாலில் மழைக காலங்களில் வெள்ளம் கட்டுபாடு இன்றி செல்கிறது. அந்த சமயத்தில் இருகரையில் உள்ள வயல் வெளிகளிலும் விவசாய பணி பெரிதும் பாதிக்கப்படுகிறது. வடிகாலும் மறு கரையில் உள்ள வயல் வெளிகளில் வாழை, பூ, நஞ்சை பயிரிட்டு வருகிறார்கள். இப்பகுதியில் விளையும் பயிருக்கு தினமும் இடுபொருள்களை கொண்டு செல்லவேண்டும், விளை பொருள்களை எடுத்து வரவேண்டும். இந்த விவசாயிகள் சாதரண காலங்களில் தலை சுமையாக சுமந்து தூதுகுழி வடிகாலை கடந்து தான் இக்கரைக்கு வருவார்கள். வெள்ளம் வந்து விட்டால் இவர்கள் கரையை கடக்க முடியாது. எனவே விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். விளைநிலங்களில் பொருள்களை கொண்டு செல்ல முடியவில்லை.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்தில் உள்ள எட்டு கிராம மக்களுக்கு இடுகாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் இருந்தது. இங்கு செல்ல மழைக்காலங்கள் முடியாத காரணத்தினால் இந்த இடுகாட்டை முழுவதும் மறந்து விட்டனர். இந்த பகுதியில் ஒரு காலத்தில் கள்ளிகாடு என்ற கிராமம் இருந்துள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தினால் இவ்வூர் மக்கள் தற்போது கருங்குளம் பகுதியில் வந்து குடியேறிவிட்டனர். இந்த மககளின் குலதெய்வமான கூழையாற்று சுடலை, பேச்சியம்மன் உள்பட பல ஆலயங்கள் இந்த பகுதியில் தான் உள்ளன. இககோயிலை வணங்கும் பகதர்கள் தூதுகுழி வடிகால் இல்லாத காரணத்தினால் பல கிலோ மீட்டர் சுற்றி ஆலயத்துக்கு வருகிறார்கள். அதுவும் வடிகாலில் வெள்ளம் வந்தால் கோயிலுக்கு வரஇயலாது.
எனவே தூதுகுழி வடிகாலில் பாலம் கட்டினால் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அண்ணாநகர், சந்தையடியூர், கரையடியூர், மேல தூதுகுழி, கீழ தூதுகுழி, எஸ்.என்.பட்டி, அய்யனார்குளம் பட்டி, கருங்குளம், முத்தாலங்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்துககு மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் குமார் கூறும் போது, மக்களுக்கு மிகவும் தேவையான இந்த பாலத்தினை கட்ட வேண்டும் என எங்கள் பகுதி மக்கள் கடந்த 50 வருட காலமாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை பாலம் கட்ட நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக இந்த பாலத்தினை கட்டி தரவேண்டும் என்று கூறினார்.
இப்பகுதி மக்கள் பிரச்சனை தீர உடனடியாக தூதுகுழி வடிகாலில் பாலம் அமைத்து தரவேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


