நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ( சனவரி 23, 1897 –ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.
இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில், 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள், வங்காள, இந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது.இவரது தாயார் பிரபாவதிதேவி “தத்” எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
1933 பிப்ரவரி 13 இல், உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, அங்கேரி, இத்தாலி, செருமனி எனப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து, நாட்டின் விடுதலையைப் பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் எமிலியை, போஸ் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 1942 நவம்பர் 29 இல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.
இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான ‘ஜான்சி ராணி படை‘யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை, வேறு யாரோ என்று எண்ணி, கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல், அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.


