ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆறு பழைய பாலத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரவருணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் அப்போதைய போக்குவரத்துக்கு ஏற்றார் போல் குறுகிய பாலத்துடன் கட்டப்பட்டதாகும்.
இதனால் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. திருநெல்வேலி,லி திருச்செந்தூர், உடன்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள், ஸ்ரீவைகுண்டம் நகருக்கு வராமல் புதுக்குடியிலிலிருந்து நேராக சென்றன.
இதைத் தொடர்ந்து தற்போதைய போக்குவரத்துக்கு ஏற்றார் போல், ஒரே நேரத்தில் இரண்டு கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில், பழைய பாலத்துக்கு கீழ் பகுதியில் புதியதாக உயர்நிலை பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது கனரக வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாக ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் வந்து, பழைய பாலம் வழியாக நகருக்கு வெளியே செல்லவேண்டும் என்ற ஒருவழிப்பாதை முறையில் வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பழைய பாலம் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லயகற்ற நிலையில் உள்ளதால் பழைய பாலத்தின் சாலையை சீரமைக்கவேண்டும் என வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த சில நாள்களுக்கு முன் பழைய பாலத்தில் உள்ள பள்ளங்களை தற்காலிலிகமாக சீரமைத்தனர்.
ஆனால் பாலத்தின் சாலையில் பள்ளங்கள் அதிக அளவில் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர்.
எனவே, பழைய பாலத்தில் உள்ள பழுதடைந்த தார்ச் சாலையை முழுமையாக பெயர்த்து எடுத்து, புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.