
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு இந்த தீ தடுப்பு ஒத்திகை நடந்தது.
இந்த ஒத்திகையில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்ராம் தலைமை வகித்தார். தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீ அணைப்போர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவில் நிர்வாக அதிகாரிகள் அஜித் மற்றும் சிவராம்பிரபு உள்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.