தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த நதியில் பாசன வசதிக்காக 8 அணைக்கட்டுகளும் 11 கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதல் 6 அணைக்கட்டு நெல்லை மாவட்டத்திலும் 2 அணைக்கட்டு தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளன.
இப்பகுதி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 1853-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையை கட்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். 1869-ம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டு பணி 1873-ம் ஆண்டு முடிவடைந்தது. பாளையங்கோட்டையில் இருந்த கோட்டையை உடைத்து பாளையங்கோட்டை சிறைக்கைதிகளை வைத்து அணைக்கட்டி முடிக்கப்பட்டது.
அப்போதைய ஆங்கிலேய கலெக்டர் பக்கிள்துரை இதற்காக பெரும் முயற்சி எடுத்தார். இவருக்கு நன்றி கூறும் பொருட்டு இவ்வூர் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பக்கிள் என பெயரிட்டு அழைத்தனர். அந்த அளவுக்கு இந்த அணையும், அணையை கட்டிய பங்கிள் துரையும் மக்கள் மனதில் முக்கிய இடம் பிடித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பாசன வசதிக்காக தென்கால் மூலம் 12760 ஏக்கர் பாசமும், வடகால் மூலமாக 12800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த அணைக்கட்டு உள்ளே ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம் உள்பட 1000க்கான கிராமங்களுககு குடிதண்ணீர் கொண்டு செல்ல உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் இந்த அணையில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
145 ஆண்டுகள் கழிந்து விட்டது. ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணைக்கட்டை பொதுப்பணித்துறை இதுவரை பராமரிக்கவில்லை. மராமத்தும் செய்யவில்லை.
தற்போது அணையில் விரிசல் மற்றும் ஓட்டை ஏற்பட்டு வீணாக பல்லாயிரக்கணக்கான தண்ணீர் கடலுக்கு சென்றது. அணையின் கீழ்பகுதியில் கரைகளில் உள்ள கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால் கரைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் அணையை சீரமைக்கும் பணிகள் துவங்கும் என்றனர்.
முதற்கட்ட பணியாக நேற்று ஸ்ரீவைகுண்டம் அணையில் ஏற்பட்ட ஓட்டைகள் அடைக்கப்பட்டு, விரிசல் ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் துவங்கியது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.