தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு 1865ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின்னர் இந்த அணைக்கட்டின் மேலே திருநெல்வேலி & ஸ்ரீவைகுண்டத்தினை முக்கிய இணைப்பு பாலம் அமைக்கப்பட்டது. அந்த பாலத்தின் வழியாகத்தான் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், பள்ளி கல்லூரி வாகனங்களும், கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்பவர்கள் இந்த பாதையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நவத்திருப்பதி கோவில்கள் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் மற்றும் அனைத்து நவத்திருப்பதி கோவில்களுக்கும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த அணைக்கட்டின் மேல்ப்பகுதியில் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் கனமழை காரணமாக இந்த பாலத்தின் மீது அமைந்துள்ள சாலை மிகுந்த சேதமடைந்துள்ளது. இதனால் பயணிகளும், ஓட்டுநர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று இந்த சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையில் உள்ள பள்ளங்களை மட்டும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் முழுவதும் சாலையை பெயர்த்தெடுத்து சாலையை முழுவதுமாக புதிய சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,
தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு மேல் பகுதியில் போடப்பட்ட சாலை வழியாகத்தான் மறு பகுதியில் உள்ள நவத்திருப்பதி கோவில்கள் மற்றும் நவகைலாயத்தில் சனிஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரச்சித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இதனால் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சேதமடைந்த நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளிடமும், பொதுப்பணித்துறையினரிடமும் புகார் தெரிவித்தோம். ஆனால் இன்று இந்த சாலையில் உள்ள பள்ளங்களை மட்டும் ஒட்டுப்போடுவதற்காக தார் கொண்டு வந்து வேலை செய்து வருகின்றனர். இந்த ஒட்டுப்போடும் பணி எப்போது பள்ளங்கள் விழுந்தாலும் நடந்து வருகிறது. இதனால் பாலத்தின் வலு குறைந்து வருகிறது. எனவே இந்த சாலையை முழுவதுமாக பெயர்த்தெடுத்து முழுமையாக புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.
பாலத்தின் மீது போடப்பட்ட சாலையை முழுவதுமாக பெயர்த்தெடுத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.