ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தேங்கும் அமலைச் செடிகளை தொடர்ந்து அகற்றய போதும் தேங்கிக்கொண்டே வருவதை அகற்ற வழி தெரியாமல் அதிகாரிகள் திகைக்கின்றனர். இனியாவது, பொதுப்பணித் துறையினர் தேங்கிக் கிடக்கும் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் மூலமே குடிநீர். பாசன தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை நம்பியே இரு மாவட்டத்திலும் விவசாயப் பணிகள் தொடங்குவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுணடம் அணையின் வடகால், தென்கால் பாசனத்தை நம்பி 25 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன.
சுமார் 140 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணை போதிய பராமரிப்பின்றி மண்மேடாகி தூர்ந்து போய் கிடந்தது. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பின்னர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தூர்வாரும் பணி நடந்தது. அந்த பணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறி பணிகள் இடையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆற்றில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து வரும்போது மேற்பகுதியில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் அமலைச்செடிகளும் ஆற்றுத்தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. இந்த அமலைச்செடிகள் எல்லாம் தற்போது தாமிரபரணியின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் நீண்ட தூரத்திற்கு பசுமை போர்த்திய வயல்வெளி போன்று தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் இருப்பதே தெரியாமல் வெறும் அமலைச் செடிகளால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் மாசுபட்டு வருகிறது. அமலைச்செடிகள் தண்ணீரை அதிகப்படியாக உறிஞ்சி உயிரோட்டமாக வாழ்வதால் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. அணைக்கட்டுப் பகுதியில் அமைந்துள்ள உறைகிணறுகளில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், காயல்பட்டிணம் நகராட்சிக்கும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் எடுக்கப்படும் குடிநீர் அமலைச்செடிகளின் தேக்கத்தால் மாசுபட்டு கலங்களாக வருகிறது. இந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்க முடியாமல் பரிதவித்து வரும் அவல நிலை தொடர்கிறது.
வெகு தொலைவிற்கு பரந்து விரிந்து தேங்கி கிடக்கும் அமலைச்செடிகளால் பொதுமக்கள் ஆற்றின் படித்துறைகளில் இறங்கி குளிக்க முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அமலைச்செடிகளின் உள்ளே பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களும் கிடப்பது தெரியாத நிலையில் இதனை அறியாமல் ஆற்றில் இறங்கி குளிக்கும் மக்களை அவைகள் கடித்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அணையின் முகத்துவாரத்தில் அவ்வப்போது தேங்கும் அமலைச் செடிகளை ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் தலைமையில் வருவாத்துறையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். இருந்த போதும் அமலைச்செடிகள் மீண்டும் மீண்டும் வந்து அணை முழுவதும் தேங்கி விடுகிறது. பொதுவாக அணைக்கட்டில் தேங்கும் அமலைச்செடிகளை அகற்றும் முழு பொறுப்பும் பொதுப்பணித்துறையினரிடம் தான் உள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை ஒரு பொருட்டாக கண்டு கொள்வதில்லை. இதற்கான பணிகள் நடக்கும் நேரத்தில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் என உயர் அதிகாரிகள் வரும் நேரத்தில் சரியாக பொதுப்பணித்துறையினர் ஆஜராகி விடுகின்றனர். மற்ற நேரங்களில் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
எனவே அடிக்கடி அணைக்கட்டு பகுதியில் வந்து சேரும் அமலைச்செடிகளை அகற்ற அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாபுஷ்கர திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வேண்டிய மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.