தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இதன் மூலம் சட்ட ஆலோசனைகள், சட்ட அறிவுரை, சட்டப்பிரச்சனைகள், கைது செய்யப்பட்டோர் உதவி பெற, நீதிமன்றங்களில் இலவச வழக்காட என பல உதவிகளை இந்த வட்ட சட்டப்பணிகள் குழு செய்து வருகிறது.
இன்று ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வீடு வீடாக சென்று சட்ட விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் செய்யும் வாகனத்தை ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முருகன் துவக்கி வைத்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆஷா கௌசல்யா சாந்தினி, வழக்கறிஞர் சங்கத்தலைவர் பெருமாள்பிரபு, செயலாளர் சங்கரலிங்கம், மூத்த வழக்கறிஞர்கள் ரகுநாத், கருப்பசாமி மற்றும் வழக்கறி-ஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதன்பின் ஆலோசனைகள் குறித்து துண்டுப்பிரச்சுரம் வழங்கப்பட்டது. வீடு மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரச்சுரம் வழங்கப்பட்டது.
இந்த பிரச்சார வாகனம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் துவங்கி ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம், டிப்போ, அதன்பின் நத்தம், திருப்புளியங்குடி, பேரூர், ஆழ்வார்தோப்பு, வரதராஜபுரம், இரட்டைத்திருப்பதி, மங்கலகுறிச்சி, ஏரல், குரங்கணி, குருகாட்டூர் வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகம் வந்தடைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டச்சட்டப் பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.