ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் மனுநீதிநாள் முகாம்.
ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வருவாய் துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை ஒரு பயனாளிக்கு, ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500–ம், நலிந்தோர் உதவித்தொகை 25 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும், விதவை, மாற்றுத்திறனாளி, முதியோர் உதவித்தொகை என 32 பயனாளிகளுக்கு, மாதந்தோறும் தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 3 பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 3 பேருக்கும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கும், பசுமை வீடுகள் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கும் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 10 பேருக்கு வேலை அடையாள அட்டையும், ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் ஒருவருக்கு தையல் எந்திரம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டது. விளையாட்டு துறையின் சார்பில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தனித்துணை ஆட்சியர் காமராஜ்,தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் ,வட்டாச்சியர்கள் செல்வ பிரசாத், மாணிக்கவாசகம்,வதனாள், பழைய காயல் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா ,கிராம நிர்வாக உதவியாளர்கள் திரவியம், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.