
வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பீடத்தில் வருகிற 31 ந்தேதி தை பூசத்திருவிழாவை முன்னிட்டு 1008 தீப ஜோதி ஏற்றுதல் நடைபெறுகிறது. சந்திர கிரகணம் ஏற்படுவதால் காலை 10 மணிக்கு ஜோதி ஏற்றுதல் பூஜை நடைபெறுகிறது.
வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பீடம் உள்ளது. தனது உடலை எட்டு துண்டாக பிரித்து யோகம் செய்யும் சித்தராக வாழ்ந்த இவரின் சமாதி சிறப்பு பெற்றது. வள்ளலாரின் வழிதோன்றல் என போற்றப்படும் இவரது பீடத்தில் அவர் ஏற்றிய தீபங்கள் சுமார் 30 வருடங்களாக அணையாமல் எரிந்து வருகிறது.
இங்கு தை பூசத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இதையொட்டி 30 ந்தேதி வருஷாபிசேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு திருஅருட்பா, அகவல் பாராயணம் நடைபெறுகிறது. 12.30 மணிக்கு அருள் ஆனந்த செந்தில் வினாயகப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 1மணிக்கு அலங்காரம், தீப ஆராதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
31 ந்தேதி காலை 4.15மணிக்கு அபிஷேகங்கள், காலை 7.15மணிக்கு கூழ் பூஜை மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது. காலை 8.15மணிக்கு திருஅருட்பா அகவல் பாராயணம் நடக்கிறது. காலை 10.15 மணிக்கு கோபூஜையை தொடர்ந்து அருள் ஆனந்த சபையில் 1008 தீப ஜோதி ஏற்றுதல், மதியம் 12.15 மணிக்கு தைபூச பூஜையை தொடர்ந்து திருஅருட்பா, தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு உடன் கூடிய ஜோதி வழிபாடு, மகாதீப ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறும்.
சந்திர கிரகணம் நிகழ் இருப்பதை முன்னிட்டு 1008 தீப ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி காலை 10.15 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் தொண்டர் குலம் செய்துவருகிறது.