வறண்டு காணப்படும் புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்துக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் தென்பகுதியில் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புத்தன்தருவை, வைரவம்தருவை உள்ளிட்ட குளங்கள் உள்ளன. பருவமழை பொய்த்ததால் இந்த குளங்கள் தற்போது வறண்டு காணப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், மணிமுத்தாறு அணையிலிருந்து இந்த குளங்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயியும், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் செயலருமான தேவதிரவியம் கூறியது: கிணறுகளில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் போதுமான தண்ணீர் இல்லாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்துக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து சடையனேரி கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து குளத்தை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.