புதுடெல்லி: வரி கட்டாமல் தலைமறைவாகி விடுபவர்களின் முகவரியை உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், வாக்காளர் அட்டை போன்றவைகளின் ஆவணங்களில் இருந்து எடுக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால், வரி வசூலில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் கணிசமான தொகை, வருமான வரித்துறையின் மூலம் கிடைக்கிறது. இதனால், வருமான வரி வசூலை தீவிரப்படுத்த, இந்த துறையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
ஆனால், வருமான வரியை செலுத்தாமல் லட்சக்கணக்கானவர்கள் இத்துறையை ஏமாற்றி வருகின்றனர். ஒருமுறை வரி செலுத்தியவர்கள் மறுமுறை செலுத்துவது கிடையாது. முகவரியை மாற்றி விட்டு, வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றனர். வருமான வரித்துறைக்கு இப்போதுள்ள அதிகாரத்தின்படி, வரி செலுத்தபவர்கள் இத்துறைக்கு ஏற்கனவே கொடுத்துள்ள முகவரி அல்லது பான் கார்டில் கொடுத்துள்ள முகவரிக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்ப முடியும். இந்த முகவரிகளில் அவர்கள் இல்லாவிட்டால், அவர்களின் இருப்பிடத்தை வருமான வரித்துறையால் கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த வகையில் வரி செலுத்தாமல் ஏமாற்றி வருபவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். இதனால், இத்துறைக்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி வராமல் போகிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண மத்திய நிதியமைச்சகம், வருமான வரித்துறைக்கு புதிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன்படி, வரி செலுத்தாமல் தலைமறைவானர்களின் முகவரியை, நகராட்சி, ஊராட்சி அல்லது மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள், வாக்காளர் அடையாள அட்டை ஆவணங்கள், வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தபால் நிலையம், விவசாய வருமான கணக்கு தாக்கல் ஆவணங்கள், ஓட்டுனர் உரிமை ஆவணங்கள் போன்றவைகளில் இருந்து வருமான வரித்துறை எடுக்கலாம். இவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் ஏமாற்றியவர்களின் முகவரி கண்டிப்பாக கிடைக்கும் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டு இருப்பதற்கான அறிவிக்கையை வருமான வரித்துறை கடந்த 20ம் தேதி வெளியிட்டது.
இது பற்றி வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வரி செலுத்துபவர்கள் சில நேரங்களில் முகவரியை மாற்றி இருந்தாலும், அதை பல்வேறு காரணங்களால் தெரிவிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், வரி கட்டாமல் ஏமாற்றும் நோக்கத்தில் தலைமறைவாகி விடுபவர்கள் அல்லது முகவரியை வேண்டும் என்றே மாற்றி விடுபவர்களை இதன் மூலம் எளிதாக கண்டுபிடித்து விடலாம்’’ என்றார்.இப்போதுள்ள அதிகாரத்தின்படி, வரி செலுத்தபவர்கள் வருமான வரித்துறைக்கு ஏற்கனவே கொடுத்துள்ள முகவரி அல்லது பான் கார்டில் கொடுத்துள்ள முகவரிக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்ப முடியும்.