மனைவி மிரட்டியதால் தற்கொலை செய்யபோவதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால் பாண்டி. இவரது மனைவி இன்பவள்ளி. இவர் ஸ்ரீவைகுண்டம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது 2-வது மகன் மேகராஜுக்கு (36) திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம்.
தற்போது மேகராஜ் என்னுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10–ம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை மீட்டு தரவேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் மேகராஜ் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது மனைவி அடிக்கடி என்னுடன் தகராறு செய்து வந்தார். எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் என்னால் வேலைக்கு செல்ல முடியாததையடுத்து மனைவி மற்றும் மாமனார், அவரது குடும்பத்தினர் என்னை அவதூறாக பேசினர்.
மேலும் எனது மனைவி என் மீது வரதட்சணை புகார் செய்வேன் என மிரட்டினார். இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து மேகராஜ் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரது கதி என்ன? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.