தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த நதியில் பாசன வசதிக்காக 8 அணைக்கட்டுகளும் 11 கால்வாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதல் 6 அணைக்கட்டு நெல்லை மாவட்டத்திலும் 2 அணைக்கட்டு தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளன.
இப்பகுதி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 1853-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணையை கட்ட ஆங்கிலேயர்கள் 1869-ம் ஆண்டு தொடங்கிய அணைக்கட்டும் பணி 1873-ம் ஆண்டு முடிவடைந்தது.
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பாசன வசதிக்காக தென்கால் மூலம் 12760 ஏக்கர் பாசமும், வடகால் மூலமாக 12800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த அணைக்கட்டு உள்ளே ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், நாசரேத், உடன்குடி, சாத்தான்குளம் உள்பட 1000க்கான கிராமங்களுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்ல உறை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
145 ஆண்டுகள் கழிந்து விட்டது. ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணைக்கட்டை பொதுப்பணித்துறை இதுவரை பராமரிக்கவில்லை. மராமத்தும் செய்யவில்லை. இதனால் அணையில் விரிசல் ஏற்பட்டது. தற்போது அணையில் விரிசல்கள் ஓட்டையாக மாறிவிட்டது. இதனால் அணையை தூர்வாரியும் அணைக்கட்டு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்வையிட வருகை தந்தார். அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுப்பணித்துறையினர் அணைக்கட்டு பகுதியில் உள்ள வேலைகளை விரைவில் முடித்து தருவதாக உறுதியளித்தனர். அதன்பின்னர் நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
தாமிரபரணி ஆறு மிகவும் பழைமையானது. தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு கட்டப்பட்டு 140 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. பல மழை வெள்ளங்கள் வந்த காலத்தில் இந்த அணைக்கட்டு உறுதியுடன் இருந்தது. இடைக்காலத்தில் முறையாக பராமரிக்காத காரணத்தினாலும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தூர்வாரும் போதும் அணைக்கட்டு பகுதி சேதமடைந்தது. இதனை பொறியாளர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு எந்தவித சேதமும் இல்லாமல் கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளது வரவேற்கதக்கது. இந்த பகுதியில் இருந்து பல ஊர்களுக்கு குடிநீர் செல்கிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைக்கட்டு பகுதியை முறையாக சீரமைத்து தர வேண்டும் என்றும் அதற்கு பொதுமக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.