நாடகத்துறையில் சிறு வயதில் இருந்தே இவர் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 2 வது வகுப்பு படிக்கும் போதே முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயத் திடலில் இவர் நடித்த நாடகம் அரேங்கேறியது. முதல் நாடகத்தில் ஒரே ஒரு வசனத்தை கூட பேச வெட்கப்பட்டு இடையிலே மேடையை விட்டு இறங்கினார். இதனால் ஆசிரியையிடம் குட்டுப்பட்டார். எப்படியாவது நாடகத்தில் நடித்தே தீர வேண்டும் என்ற ஆர்வத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடக நடிகர் தேர்வுக்கு சென்றார். ஆனால், அங்கேயும் உச்சரிப்பு சரியில்லை என நிராகரித்தனர். இருந்தாலும் முயற்சியை தளர விடாமல், நாமே நாடகம் எழுதினால் என்ன என்ற உத்வேகத்துடன் பல நாடகங்களை எழுதினார். ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் உள்ள ஆறாம்பண்ணை, வல்லக்குளம், கிளாக்குளம், வெட்டிக்குளம், புதுக்குளம் ஆகிய கிராமங்களில் இவரது நாடகம் அரங்கேறியுள்ளது. இதில், கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.
வசந்த் டிவியில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட மண்ணின் பெருமை பேசும் “நெல்லை மண் பேசும் சரித்திரம்” என்னும் தொடரில் 75 வாரம் பங்காற்றினார். இதன் மூலம் கிடைத்த அனுபவத்தை எல்லாம் தொகுத்து தென்பாண்டிச்சீமையிலே பாகம் &1, தென்பாண்டிச்சீமையிலே பாகம் &2 என தலா ஆயிரம் பக்கங்கள் கொண்ட 2 நூலை எழுதினார். இதில் இரண்டாடவது நூல் கடந்த 22.06.2013 அன்று நெல்லையில் நடந்த புத்தக கண்காட்சியில் கலெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் வெளியானது. தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் “நம்பினால் நம்புங்கள்” என்ற தொடரில் இவர் பணிபுரிந்து வருகிறார்.
மேலும் எழுத்து துறையில் 28ஆம் ஆண்டை இந்த ஆண்டு கடக்கும் இவர் இதுவரை 35 புத்தகங்கள் எழுதியுள்ளார். விகடன், சூரியன், சைவசிந்தாந்த நூல் பதிப்பு கழகம், காவ்யா உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்கள் மூலம் இவரது நூல் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய தலைத்தாமிரபரணி என்னும் 950 பக்க புத்தகம் தாமிரபரணி வரலாற்றை எளிய தமிழ் நடையில் கூறும் மிகப்பெரிய நூலாகும்.