தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 10 ம் தேதி பொது விநியோகத்திட்டம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது… பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பிப்ரவரி 2018 மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை 10 ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
தூத்துக்குடி வட்டத்திற்கு தூத்துக்குடி சார் ஆட்சியரும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு தூத்துக்குடி பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும், திருச்செந்தூர் வட்டத்திற்கு திருச்செந்தூர் கோட்டாட்சியரும், சாத்தான்குளம் வட்டத்திற்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை), கோவில்பட்டி வட்டத்திற்கு கோவில்பட்டி கோட்டாட்சியரும், ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரும், விளாத்திகுளம் வட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டையாபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும்; மற்றும் கயத்தார் வட்டத்திற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.