
தூத்துக்குடி மாவட்டத்தில் கம்ப்யூட்டரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுவதால் அனைத்து அஞ்சலகங்களும் 30ம் தேதி வரை இயங்காது ஒன அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் கம்ப்யூட்டர் மென்பொருள் தொழில்நுட்பம் இன்போசிஸ் நிறுவனம் மூலம் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதை டாட்டா கன்சல்டென்சிற்கு மாற்றப்பட உள்ளது. இதனால் கம்ப்யூட்டரில் புதிய மென்பொருள் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு டிவிசன் வாரியாக இந்த மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது வேலூர் டிவிசன் முடிந்து தூத்துக்குடி டிவிசனில் இந்த பணி நடந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் அஞ்சலகம் மூலம் மணியார்டர் பதிவு தபால், சேமிப்பு மற்றும் ஸ்டாம்ப், கவர், தபால் விற்பனை அனைத்தும் தற்காலிகமாக இந்த மாதம் 30ம் தேதிவரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய அறிவிப்பு அனைத்து அஞ்சலக அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. தபால் விநியோகம் மட்டுமே நடைபெறும். அதுவரை பதிவு தபால், விரைவு தபால், மணியார்டர் அனுப்ப இருப்பவர்கள் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த நிலைமை 30ம் தேதி சரியாகிவிடும் என அஞ்சல்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் நேற்று அஞ்சலகத்திற்கு வந்தபலரும் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.