திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு எ்ஸ்.பி.மகேந்திரன் பல்வேறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இந்தாண்டு 31.01.2018 அன்று நடைபெறும் தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இத்திருவிழாவிற்கு நடைபயணம் மூலமாக வரும் பக்தர்கள் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ள கீழ்க்கண்ட வேண்டுகோளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத்துள்ளார்.
1) இத்திருவிழாவிற்கு மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நடைபயணமாக வரும் பக்தர்கள் சாலை விதிகளை கடைபிடித்து சாலையின் ஓரமாக நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2) பாதசாரிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி காவல்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு சம்பந்தமான அறிவுறைகளை பெற்று பிரதிபலிக்கும் ஸ்டிக்கரை பாதசாரிகளின் கையிலோ அல்லது உடலின் பின்புறத்திலோ ஒட்டிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
3) நடந்து செல்லும் பக்தர்கள் சாலையின் வலது பக்கமாக நடந்து சென்று எதிர் திசையில் வரும் வாகனங்களை கவனித்துக் கொண்டே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4) பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் ஓய்வெடுக்க எக்காரணத்தைக் கொண்டும் சாலையில் உட்காரவோ, படுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
5) தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக 24 மணி நேரமும் இயங்கும் காவல் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திருச்செந்தூர் கோவில் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
6) இரண்டு / நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.