தமிழகம் முழுவதும் சான்றிதழ்கள் வேண்டி விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று அலைய வேண்டியதில்லை
தமிழகம் முழுவதும் சான்றிதழ்கள் வேண்டி விஏஓ, வருவாய் ஆய்வாளர் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று அலைய வேண்டியதில்லை.
தற்போது வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களான இதர பிற்படுத்தப்பட்டோர் சான்று (ஓபிசி), வாரிசு சான்று உட்பட 15 சான்றுகள் விரைவில் ஆன்லைனில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் இந்த சேவையானது விரைவில் அமலாகும் என்று தெரிகிறது.
தமிழகம் முழுவதும் வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வந்த சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பூர்வீக சான்று, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவை ஆன்லைன் மூலமாக பொது இசேவை மையங்கள் மூலம் கடந்த 2012ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சான்றுக்கான கட்டணம் :
கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இசேவை மையங்கள் திறக்கப்பட்டு சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு சான்றுக்கு ரூ.60 வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் விண்ணப்பித்தல் :
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழை பொது இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் சான்றிதழ்கள் இணையதளம் மூலம் விஏஓ, வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார்களுக்கு ஆன்லைனில் அனுப்பப்படும். விண்ணப்பிக்கும் சான்றிதழ்கள் அனைத்திலும் டிஜிட்டல் கையொப்பம் இடப்படும். இதற்காக விஏஓ மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
சான்றுக்கு பதிவு செய்த உடனேயும், சான்று தயாரான உடனேயும் அது தொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களின் கைபேசிக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பப்படும். விண்ணப்பதாரர்கள் தகவல் கிடைத்தவுடன், விண்ணப்பித்த மையத்திற்கு சென்று சான்று பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த முறையில்தான் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதையடுத்து மேலும் 15 சான்றுகளை ஆன்லைன் மயமாக்க தமிழ்நாடு இ கவர்னன்ஸ் முகமை முடிவு செய்துள்ளது.
ஆன்லைனில் கிடைக்கும் 15 சான்றிதழ்கள் :
இடப்பெயர்ச்சி சான்று, வேலைவாய்ப்பற்றோர் சான்று, விதவை சான்று, வேளாண் வருவாய் சான்று, பள்ளிச் சான்றுகள் தவறியதற்கான சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, திருமணமாகாத சான்று, கலப்பு திருமண சான்று, வாரிசு சான்று, சால்வன்சி சான்று, அடகுகடை சான்று, வட்டி நிறுவன சான்று, ஓபிசி சான்று, சிறுகுறு விவசாய சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகிய 15 சான்றுகள் ஆன்லைன் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு E கவர்னன்ஸ் :
இத்திட்டத்தின் முதற்கட்டமாக நெல்லை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு இ கவர்னன்ஸ் முகமை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பொது இசேவை மைய பணியாளர்கள், விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் துணை தாசில்தார்களுக்கு மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் திட்டம் செயல்படும் விதத்தை பொறுத்து பின்னர் படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.