செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானது பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயம். தென் சிதம்பரம் என போற்றப்படும் இந்த ஆலயத்தின் 10 வது நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி நடந்தது. 100 வருடங்களுக்கு பிறகு ஒரே நேரத்தில் ஐந்து சப்பரங்கள் வந்த காரணத்தினால் பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தினை போலவே இங்கு மார்கழி திருவிழா நடந்தது. ஆனால் ஆலயம் சிதிலமடைந்த காரணத்தினால் திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதற்கிடையில் பக்தர்கள் முயற்சியால் கோயில் சீரமைக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிசேகம் மிகச்சிறப்பாக நடந்தது. கடந்த ஆண்டு கொடிமரம் அமைக்கப்பட்டது. தற்போது திருவிழா நடத்த பக்தர்களால் திட்டமிடப் பட்டது.
சுமார் 100 வருடங்களுக்கு பிறகு 10 நாள் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்த காரணத்தினால் பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். இதற்காக கடந்த 24 ந் தேதிகாலை 11 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்தொடர்ந்து முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் ரிஷப வாகனத்திலும், 3 ம் நாள் சூரிய வாகனத்திலும, 4 வது நாள் பூத வாகனத்திலும், 5 நாள் ரிஷப வாகனத்திலும், 6 நாள் யானை வாகனத்திலும், 7 ம் நாள் கைலாய வாகனத்திலும் நடராஜர் வீதி உலா வந்தார்.
31ந் தேதியை முன்னிட்டு எட்டாம் திருநாள் யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. ஸ்ரீநடராஜர் பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் நடந்தது. பின ஸ்ரீமாணிக்கவாசகர் புறப்பாடு, மாணிக்க வாசகர் நடராஜ பெருமானோடு ஐக்கியம் மற்றும் தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி பச்சை சாத்தி வீதி உலா வந்தார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி வீதி உலா வந்த காரணத்தினால் பக்தர்கள் ஆர்வத்துடன் தரிசனம் செய்தனர். ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி யாகசாலை பூஜை நடந்தது ஸ்ரீநடராஜர் பஞ்ச மூர்த்திகள் அபிசேகம் நடந்தது. தொடர்ந்த பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்தனர். 100 வருடம் கழித்து ஐந்து சப்பரங்கள் ஒரே நேரத்தில் வந்தகாரணத்தினால் பக்தர்கள் ஆவலுடன் வந்து வரவேற்றனர்.
10 நாள் திருவிழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ஆரம்பமானது. ஸ்ரீருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து அபிசேகம் நடந்தது. நடராஜர் நடன தீபாராதனை, ஆருத்ரா தரிசனம், ஸ்ரீகாரைக்கால் அம்மையார் மற்றும் மாணிக்காவாசகருக்கு நடராஜ பெருமான் திருநடன காட்சியை அளித்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சிவகாமி அம்பிகா ஸ்ரீநடராஜபெருமான் திருவீதி உலா எழுந்தருளல், மீண்டும் ஆலயம் சேர்ந்தவுடன் தீபாராதனை நடந்தது. மாலை யாகசாலை பூஜை நடந்து சிவபூதகன வாத்தியமம் இசை முழங்க சுவாமி வெள்ளை சாத்தி திருவீதி உலா எழுந்தருளல் நடைபெற்றது.
11 ஆம் நாள் திருவிழா வை யொட்டி வருகிற நாளை 3 ந்தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது. தொடர்ந்து நடராஜர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிசேகம் தீபாரதனை நடைபெறுகிறது. அதன் பின் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்த வாரி எடுத்து வருதலும் மாலை 5 மணிக்கு கொடி பட்டம் நிறைவு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.