பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் செய்துங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி செய்துங்கநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத்தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அஸாருதீன், பொருளாளர் சேக் முஹம்மதுஅலி, துணைத்தலைவர் தமீம், மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், நாஸர், இமாம்பரீது, மாணவரணி செயலாளர் ஷமீம், மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலச்செயலாளர் கி.ரி.அப்துல்ரஹீம் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்து மதத்தினர் புனிதமாக மதிக்கும் ஆண்டாளை கவிஞர் வைரமுத்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக்கூறி அதை பா.ஜ.க. தேசியச்செயலாளர் எச்.ராஜா கண்டித்து பேசியுள்ளதை அனைவரும் அறிவீர்கள்.
தங்களால் புனிதமாக மதிக்கப்படுபவரை யாரேனும் தவறாக விமர்சனம் செய்தால் அதைக் கண்டிக்க அவரவர்களுக்கு உரிமை உண்டு. இதனை யாரும் இல்லை என்று சொல்ல இயலாது. இந்த கண்டிப்பானது மற்றவர்களையும், பிறமதத்தினரையும் புண்படுத்தாத வகையில் இருக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆனால், ஆண்டாளை விமர்சனம் செய்த கவிஞர் வைரமுத்துவை கண்டிக்கும் சாக்கில் பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா ”முஸ்லிம் மக்களின் புனிதரான நபிகள்நாயகத்தை உன்னால் பேச முடியுமா? என்று இஸ்லாம் மார்க்கத்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்துள்ளார்”. இது எங்களின் மனதை மிகவும் புண்படுத்தும் செயலாகும்.
நபிகள்நாயகத்தையும் அவர்களின் குடும்பத்தினரையும் வம்புக்கிழுக்கும் வகையில் பேசியுள்ள எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், இனிமேல் அவர், எங்களின் புனிதரான நபிகள்நாயகத்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தால் முஸ்லிம் சமுதாயம் கடுமையான வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டியது வரும் என்று எச்சரிக்கவும் இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியுள்ளோம்.
ஒற்றுமையாக வாழ்ந்துவரும் அனைத்து மதமக்களிடமும் மதவெறியை தூண்டும் விதமாகவும், இந்திய இறையாண்மைக்கும், மதஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து தேவையில்லாமல் பேசிவரும் எச்.ராஜாவை தமிழகஅரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திடவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து முஸ்லிம் மக்களை வஞ்சித்து வருகிறது. ஹஜ் புனித பயணம் செல்வதற்கான மான்யத்தை ரத்து செய்துள்ளதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாங்கள் மகிழ்ச்சி தான் அடைந்துள்ளோம். ஏனென்றால் இந்த மான்யம் என்ற பெயரில் விமானக்கட்டணத்தை அதிகமாக உயர்த்தி எங்களிடம் வசூலித்து வந்த செயலுக்கு இதனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எங்களை பொறுத்தவரை மிகவும் வசதியானவர்கள் தான் ஹஜ் புனிதப்பயணம் செல்கின்றனர். இதனால் நாங்கள் இதனை ஒருபொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால், பாஜக அரசானது தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீது இப்படி பாகுபாடு உணர்வுடன் நடந்துகொள்வது சரியானதல்ல. இதுபோன்ற தவறான மனநிலையுடன் நடந்துகொள்ளும் மத்திய அரசுக்கு நாங்கள் சரியானநேரத்தில் தகுந்த பதிலடி கொடுத்திடுவோம்.
இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் முஸ்லிம் மக்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை. 10சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதுதொடர்பாக மத்திய அரசின் அழைப்பின்பேரில் பிரதமரை நேரில் சந்தித்து பேசியபோதும் கடைசி வரை அதனை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவே இல்லை என்றார்.
ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில், ஸ்ரீவைகுண்டம் கிளை செயலாளர் ஹமீத்அலி, பொருளாளர் முகமதுஇம்ரான், துணை தலைவர் முகமதுஅரபாத், துணை செயலாளர் பாசித், கொங்கராயகுறிச்சி&ஆறாம்பண்ணை கிளை நிர்வாகிகள் மிராசி மீரான், மன்சூர், இஸ்மாயில், முஹம்மதுமைதீன், அக்பர்ஷா, சிக்கந்தர் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் அஸாருதீன் நன்றி கூறினார்.