செய்துங்கநல்லூர் மூப்பனார் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம்(56). இவர் கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் லோடு மேனாக பணியாற்றி வந்தார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு காலில் உள்ள ரத்த குழாய் பாதிக்கப்பட்டு வலது காலை இழந்தார். அதன் பின் இவரால் வேலை எதுவும் செய்ய முடியவில்லை. காலை இழந்தாலும் மனதைரியத்தினை இழக்காத அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் பார்த்தார். ஆனால் ஒரு காலால் அவரால் தள்ளுவண்டியை தள்ள முடியவில்லை. இதற்கிடையில் டீ காபி வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்தார். இதற்காக அரசு தனக்கு மோட்டார் மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனம் ஒன்றை இலவசமாக வழங்கினால் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு ஏற்படும் என அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அரசு சார்பில் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை.
இதுகுறித்து சிதம்பரம் கூறும்போது, நான் லோடு மேனாக இருந்து குடும்பத்தினை பாதுகாத்து வந்தேன். தற்போது வலது கால் இல்லாமல் குடும்பத்துக்கு பாரமாக உள்ளேன். சொந்தமாக தொழில் செய்யலாம் என்றால் ஓரிடத்தில் இருந்து மறு இடத்துக்கு செல்ல மோட்டார் மூன்று சக்கர சைக்கிள் வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சி தலைவர், எம்.எல்.ஏ., எம்.பி., உள்பட பலரிடம் மனு கொடுத்து விட்டேன் இதுவரை நடவடிக்கை இல்லை என்றார்.
உடனடியாக சிதம்பரத்தின் தன்னம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு காலை இழந்த அவருக்கு மோட்டார் பொறுத்திய மூன்று சக்கர சைக்கிள் வழங்க வேண்டும்.