தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சுற்றி 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைத்து அரசு வேலைகளுக்கும் சாத்தான்குளத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தை தான் நாடி வருகின்றனர்.
தற்போது அரசு சார்பில் சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் அனைத்து அரசு பிறப்பு பதிவேடு, இறப்பு பதிவேடு, வாரிசு சான்று மற்றும் ஆதார்கார்டு எடுத்தல் அனைத்தும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
தற்போது மத்திய அரசு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவித்துள்ளது. இதனால் அனைத்து வட்டாச்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதார்கார்டு எடுப்பதற்காக காத்திருக்கின்றனர்.
இதே போல் சாத்தான்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் தினமும் 40 பேருக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக டோக்கன் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 1 வார காலமாக இணைய சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் டோக்கன் வாங்கியவர்களுக்கு கூட தற்போது வரை ஆதார் கார்டு எடுக்காத அவல நிலை நீடிக்கிறது. பள்ளியில் ஆதார்கார்டு கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என்று கூறிய காரணத்தால் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் அலுவலகத்தில் உணவுகளை கொண்டு வந்து சாப்பிட்ட காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் 100 நாள் வேலைக்கு செல்பவர்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயம் என்ற காரணத்தால் முதியவர்களும் அலுவலத்தில் காத்துக் கிடக்கின்றனர்.
இதற்கு சாத்தான்குளம் வட்டாச்சியர் தனிக்கவனம் செலுத்தி இணைய சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.