சாத்தான்குளம் பகுதியில் விவசாயத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தால் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்த விவசாயப் பணிகளை துவங்கினர்.
தற்போது வரை மணிமுத்தாறு அணையில் இருந்து 1,2 ரீச்சுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சாத்தான்குளம் மணிமுத்தாறு பகுதியான 3 மற்றும் 4 வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. சாத்தான்குளம் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் வற்றி விட்டது. நெற்பயிர்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யும் தருவாயில் தண்ணீர் இல்லாததால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகியது. மீதியுள்ள பயிரை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புத்தன்தருவை, வைரவன்தருவை குளத்திற்கு விவசாயத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து 3 வது மற்றும் 4 வது ரீச்சில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சாத்தான்குளம் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதற்கு அரசு செவி சாய்க்க மறுத்தால் சாத்தான்குளம் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடியேற்றும் போராட்டம், சாலை மறியல், ரேஷன் கார்டை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.