சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. அந்த நீதிமன்றத்தில் ஆஜராகும்பொழுது வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். அப்படி அனுப்பும் வழக்குகளுக்கு எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தலாம். தங்கள் உதவிக்கு வக்கீல்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் பயிற்சி பெற்ற சமரசர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக வழிகாட்டுவார்கள். இந்த பேச்சு வார்த்தை அனைத்தும் இரகசியம் காக்கப்படும். சமரச வழக்குகளில் எந்தவித மேல்முறையீடு இல்லாமலும் விரைவாகவும், கட்டணம் ஏதுமின்றி சுமூக தீர்வு காணமுடியும். சமரசத்தின் மூலம் வழக்கு தீர்க்கப்பட்டால் வழக்கிற்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் திரும்ப நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்படும். சமரசம் ஏற்படவில்லையென்றால், நீதிமன்றத்தில் முன்புபோல் வழக்கு தொடரலாம். இதுபற்றி மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள சமரச மையங்களை அணுகலாம். இந்த விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சாத்தான்குளம் நீதிமன்றம் முன்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி அசோக் பிரசாத், குற்றவியல் நீதிபதி சரவணன், ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஏற்பாடுகளை சமரச மையங்கள் ஒருங்கிணைப்பாளர், மற்றும் அரசு வக்கீல் கல்யாண்குமார் செய்திருந்தார். வக்கீல்கள் இளங்கோ, வேணுகோபால், மணிகண்டன், ராமச்சந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


