சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் முத்துமாரியம்மன், முத்தாரம்மன், விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீகாவடி பிறை ஸ்ரீமுருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து முருகருக்கு மஞ்சள், திரவியம், பால், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பஜனை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு முருகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காவடி பிறை முருகர் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.
தென்திருப்பேரை கோயிலில்…
ஆறுமுகனேரி: நவக்கைலாயத் தலமான தென்திருப்பேரை அருள்மிகு அழகிய பொன்னம்மாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி அருள்மிகு சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலையில் பெளர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.