சாத்தான்குளம் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், 6 நாள்களாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள மணிநகர் புதூரில் உடன்குடி- திசையன்விளை பிரதான சாலையில் கருமேனி ஆற்றின் குறுக்கே பழுதடைந்திருந்த பாலம் சீரமைப்பிற்காக கடந்த 6நாள்களுக்கு முன் இடிக்கப்ட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகனங்கள் தெற்கு உடைப்பிறப்பு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. பாலத்தை பொக்கலைன் இயந்திரம் கொண்டு உடைக்கும்போது அந்த வழியாக சென்ற கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
இதுவரை குடிநீர் குழாய் சீரமை க்கப்படாததால் கொம்மடிக்கோட்டை, படுக்கப்பத்து, புத்தன்தருவை, பெரியதாழை, அழகப்பபுரம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் புதூர், மணிநகர், வடக்கு உடைபிறப்பு, சொக்கன்குடியிருப்பு உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் விலைகொடுத்து ஆழ்துளை கிணற்று தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் சேதமடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.