
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகிலுள்ள புத்தன்தருவை பஞ்சாயத்துக்கு உட்பட்ட உசரத்துக்குடியிருப்பு கிராமத்தில் மக்களின் அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், தெருவிளக்கு, துப்புரவு பணிகள் போன்றவை சுமார் 6 மாதமாக முறையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தினால் திருடர்களுக்கு வாய்ப்பாக உள்ளது. பெண்கள் வெளியில் நடமாட முடியவில்லை. துப்புரவு தொழிலாளர்கள் 6 மாதமாக இந்த பகுதிக்கு வரவில்லை. இதனால் ஊர் முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது. பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அடிப்படை வசதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெண்கள் திடீரென காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தட்டார்மடம்-பெரிதாழை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக இதற்கு தீர்வு காணாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றும் பொது மக்கள் கூறுகின்றனர்.