
கொழுக்கட்டை என்றாலே நமக்கு கார்த்திகை மாதம் நினைவுக்கு வந்துவிடும். நான் பிறந்த முத்தாலங்குறிச்சி கிராமமாக இருந்தாலும், என் தாய் பிறந்த வல்லகுளம் அரசர்குளமாக இருந்தாலும் கூட நல்ல குருத்தோலை கொய்து கொண்டு, பெரியப்பாவும், தாத்தாவும் கொழுக்கட்டை அவிக்க தயாராகி விடுவார்கள். அதே போல் சிறுவர்கள் இளைஞர்கள் எல்லோரும் பனை அலவரையில் இருந்து ஒருவகையான தீப்பொறி தயாரித்து, பனை மட்டையில் கட்டி ‘சூந்து’ என்னும் தீ விளையாட்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டு மூலமாக நோய் பரப்பும், கொசு மற்றும் ஈக்களை விரட்டுவதாக ஐதீகம். அது உண்மை என்பது போலவே ஒரு சம்பவம் கார்த்திகை அன்று என் வாழ்வில் நடந்தது.
இந்த ஆண்டு கார்த்திகையை யட்டி நல்ல மழை பெய்தது. எனவே யாரும் பனை ஏறி குருத்தோலை தர தயாராக இல்லை. எனவே எனது அத்தான் திருவாளர் தங்கபெருமாள் அவர்களிடம் எப்படியாவது பனை ஓலை வெட்டி வைத்து விடுங்கள் என்று கூறி விட்டேன். ஏன் என்றால் எனது மனைவிக்கு பனை ஓலையில் கொழுக்கட்டை செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்க வில்லை என்றால் தூக்கம் வராது. எனக்கு சோறு கிடைக்காது.
இதனால் அத்தானை தேடி அரசர்குளம் வல்லகுளம் என்று சென்றேன். கடைசியில் எங்கள் கிணற்றில் அத்தான் பனை ஓலை வெட்டி தயாராக வைத்திருந்தார். நானும் தம்பி சுடலைமணியும் , மகன் காளிமுத்து போய் சேர்ந்தோம். அங்கு மிகப்பெரிய கட்டு பனை ஓலை இருந்தது.
குருத்தோலை கிடைக்கவில்லை. ஆனாலும் கிடைத்த ஓலையை எடுத்து தம்பி தலையில் சுமந்த படி வர ஆரம்பித்தான். எப்போதுமே இந்த இடத்துக்கு வந்தால், சிறுவயது முதலே கிணற்றில் டைவ் அடித்து ஒரு குளியல் போடு வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரெல்லாம் மழை வெள்ளம். ஆனால் கிணறு வறண்டே கிடந்தது. கொஞ்சம் மனது கனக்கத்தான் செய்தது.
இதற்கிடையில் நான் சேறு சகதி வழியாக கார் நிற்கும் முனியாண்டி கோயிலுக்கு வரும் முன்பு என்னை சுற்றி ஈ மொய்த்து கொண்டது. அதானே.. ஈ… இருக்கும் இடத்தில் நமக்கென்ன வேலை. பொறவு ஈ விடவா செய்யும்.. பாட்டு பாடிக் கொண்டு சுடலை மணி வந்தான். ஆனால் ஈயோ.. என்னை நடனமாட வைத்து விட்டது. தலையை சுற்றி வந்தது. ஆகா.. அப்போது தான் தெரிந்தது நமது முன்னோர்கள் உருவாக்கிய விளையாட்டானா.. தீ பொறி சூந்து விளையாட்டு.. இது போல ஈயையும் கொசுவையும் விரட்ட தானே இதை உருவாக்கி யுள்ளார்கள். அப்படியென்றால் இந்த விளையாட்டு மறைய மறைய ஈ நம்மை விரட்டிகொண்டிருக்கிறதே.. என்பதை உணர்ந்தேன். தற்போது நமது இளைஞர்கள் இதை மறந்து விட்டனர். பரவாயில்லை.
ஆனால் டயரை கொழுத்தி கார்த்திகை பண்டிகையை மாசு பண்டிகையாக அல்லவா மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சரி… எப்படியோ.. வீட்டுக்கு வந்து , நடு இரவு 3 மணி வரை கொழுக்கட்டை அவிக்கும் வேலையை நான் எனது மகன் அபிஷ்விக்னேஷ்.ு முடித்து விட்டு நிம்மதியாக தூங்கினோம்.
எப்படியோ பனை ஓலை தந்த அத்தான் தங்கபெருமாள் அவர்களுக்கும், அண்ணன் மாரியப்பன் அவர்களுக்கும் நன்றி..
அண்ணன் மாரியப்பன் போன்ற ஓரிரு பனையேறிகள் இருக்கிற காரணத்தினாலே, தான் கார்த்திகை தீபத்துக்கு பிறகு வீட்டில் சோறு கிடைக்கிறது.