தூத்துக்குடி மாவட் கலெட்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்படியும் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மற்றும் சப்-கலெக்டர் பிரசாந்த் ஆகியோரது ஆலோசனையின் பேரிலும்ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் காலியாக உள்ள 24 கிராம உதவியாளர் பணியிடங்களை இனசுழற்சி அடிப்படையில் நியமனம் செய்ய இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடந்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜீன் 25ம் தேதி வழங்கப்பட்டது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களுடன் 12ம் தேதி மாலைக்குள் தாலுகா அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் 2000 ஆயிரம் விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். இதற்காக 1450 பேர் விண்ணப்பத்து இருந்தனர்.
5ம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாக கொண்ட பணிக்கு உயர்கல்வி முடித்தவர்களும் அதிக அளவில் விண்ணப்பித்திருந்தனர். இன்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட இருப்பதால் கிராமம் கிராமம் வாரியாக இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வு நடந்தது.
இதன்படி காலை 8 மணி அளவில் ஆறாம்பண்ணை, வல்லநாடு கஸ்பா, கொட்டாரக்குறிச்சி, வடவல்லநாடு, திருப்புளியங்குடி, விட்டிலாபுரம், தெற்கு காரசேரி, தெய்வச்செயல்புரம், தன்னூத்து, பத்மநாபமங்கலம், சிவகளை, மணக்கரை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்த நபர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு நடந்தது. மதியம் 2 மணி அளவில் மற்ற கிராமங்களும் தேர்வுகள் நடந்தது.
இந்த தேர்வுக்காக காலை முதலே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி வாலிபர்கள் குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையில் போலிசார் அவர்களை சீர் செய்தனர்.
24 கிராம உதவியாளரை தேர்ந்தெடுப்பதற்கான சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமையில் வருவாய் அதிகாரிகள் செய்திருந்தனர். இப்பணியினை சார்&ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.