காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு மனமில்லை என்றார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா.
சாத்தான்குளம் சன்னதி தெருவில், ஒன்றிய திமுக சார்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலிலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
தற்போது 15 நாள்களாக நாடாளுமன்றம் சரியாக நடைபெறவில்லை. 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அது அமைக்கப்படவில்லை. மத்திய அரசுக்கு அதற்கு மனமில்லை. கர்நாடகத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலே அதற்கு காரணம்.
திமுகவின் சாதாரண தொண்டர்கூட எந்த பிரச்னையானாலும் பேசுவர். இப்போது புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்கள் பேசக்கூடியவர்களா? தமிழகத்தில் திமுக ஆட்சியில்தான் தொலைநோக்கு பார்வையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. சமுதாயத்தில் ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி பயில காரணமாக இருந்தது திமுக ஆட்சிதான். தமிழக மக்கள் வருங்காலத்தில் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்றார் அவர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது:
சாத்தான்குளம் பகுதிக்கு சடையனேரி கால்வாய் திட்டத்தை கொண்டுவந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதிதான். இப்பகுதி வறட்சியால் பாதித்த பகுதி என அறிந்த அவர் கன்னடியன் கால்வாய் திட்டத்தை கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தை தற்போதைய அரசு முடக்கி வைத்துள்ளது. விவசாயம் இன்றி விவசாயிகள் சிரமப்படும் வேளையில் அவர்கள் உபயோகப்படுத்தும் டிராக்டர், போர்வெல் அகியவற்றுக்கு மத்திய அரசு அதிக வரிவிதித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்த இந்த அரசு பயப்படுகிறது. மத்திய , மாநில அரசுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் வருங்காலத்தில் நல்ல தீர்ப்பைத் தருவார்கள் என்றார் அவர்.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் ஆ. சவுந்திரபாண்டியன், ஒன்றியப் பொருளாளர் எஸ். வேல்துரை, மாவட்ட பிரதிநிதி படுக்கப்பத்து ஏ. இந்திராகாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலர் மகா. இளங்கோ வரவேற்றார்.
கூட்டத்தில், திமுக பேச்சாளர்கள் கதிர்வேல்மீனாட்சி, செந்தூர் பாலகிருஷணன் ஆகியோர் பேசினர். மாவட்ட கலை இலக்கிய பிரிவு செயலர் அன்பழகன், சென்னை மாநகராட்சி முன்னாள் உறுப்பினர் படுக்கப்பத்து வெற்றிவேல், முன்னாள் எம்பி எஸ்.ஆர். ஜெயத்துரை, மாவட்ட துணைச் செயலர் ஆறுமுகபெருமாள், ஒன்றியச் செயலர்கள் ஆழ்வார்திருநகரி எஸ். பார்த்திபன், கருங்குளம் நல்லமுத்து, திருவைகுண்டம் ரவி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் எஸ்.கே. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.