கருங்குளம் மெயின்ரோட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டிய மர்ம நபர்களால் முருக பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தைபூசத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடை பயணமாக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட பல பகுதியில் இருந்து நடந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோயில், விக்கிரமசிங்கபுரம் உள்பட பல பகுதியில் இருந்து நடைபயணமாக திருச்செந்தூர் வந்து செல்கின்றனர். நெல்லை& திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அலகு குத்தியும், காவடி எடுத்தும், கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்.
இவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி இல்லை. இவர்கள் நடந்து செல்லும் வழியில் சாலை ஓரத்தில் வாகனம் வந்தால் இறங்கி கூட செல்ல முடியாமல் புல் புதர்கள் வளர்ந்துள்ளன. பலர் பல இடங்களில் பாதுகாப்பின்றி படுத்து உறங்குகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பக்தர்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை வழி நெடுக போட்டு விட்டு செல்கின்றனர்.
இதனால் செய்துங்கநல்லூர் & கருங்குளம் இடையே உள்ள வயல்வெளிகளில் கூட மக்காத குப்பையா பிளாஸ்டிக் பொருள்கள் கிடக்கின்றன. இதனால் வருங்காலங்களில் வயல்வெளிகள் மாசுபடும் சூழ்நிலை உள்ளது. முருக பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பிளாஸ்டிக் பொருள்களை குப்பை தொட்டி அமைத்து அதில் போட வலியுறுத்தவும் அமைப்பும் இல்லை.
இதற்கிடையில் கருங்குளம் அருகே திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முருக பக்தர்கள் முகந்சுளித்து வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லையை சேர்ந்த நடைபயண பக்தர் மகராஜன் கூறும்போது, நாங்கள் ஒவ்வொரு திருவிழாக்களின் போதும் லட்சகணக்கான பக்தர்கள் நடைபயணம் செய்து வருகிறோம். நாள்தோறும் எங்கள் முருக பக்தர்கள் குழு அதிகரித்து வருகின்றன. ஆனால் எங்களுக்கு அடிப்படை வசதி எதுவுமே இல்லை. வழிநெடுக பிளாஸ்டிக் கழிவுகளை போட குப்பை தொட்டியில்லை. சாலைகளில் நடந்து வரும் போது தார்ரோட்டை விட்டு கீழே இறங்க முடியாமல் புதர் மண்டிக்கிறது. தற்போது கருங்குளம் அருகே மருத்துவ கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டியுள்ளனர். வெற்று காலுடன் வரும் பக்தர்கள் இதன் மீது மிதித்தாலே நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர்கள் நேரடியாக முருக பக்தர்கள் விசயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஏற்கனவே முருக பக்தர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பல அறிவுறுத்தியுள்ளார். காவல் நிலையம் முழுவதும் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டி வருகிறார்கள். ஆனால் குப்பை தொட்டிகள் வைக்கவும், இதுபோல கழிவுகள் கொட்டி முருக பக்தர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ் போடலாம்.
கேரளா போலவே இங்கு நடவடிக்கை எடுக்கலாமே
கேரள அரசு பொதிகை மலைக்கு செல்லும் யாத்திரியர்களுக்கு பல கட்டுபாட்டை விதித்துள்ளது. குறிப்பாக அவர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் குப்பைகளை ஓரிடத்தில் கொட்ட வேண்டும் எனவும் கேரள வனத்துறை ஆணை பிரபித்துள்ளது. அதுபோலவே முருக பக்தர்களுக்கு முறையான கட்டுபாட்டை விதித்து அவர்களுக்கு பாதுகாப்பாகவும், பிளாஸ்டிக் அற்ற பயணத்துக்கும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.