தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தலம் அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, தை அமாவாசை திருவிழா மற்றும் குருபூஜை விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே போல் இந்த ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி 13ஆம் தேதி வரை 12 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு சேர்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடந்தது. சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் கொடி புறப்பாடு நடந்தது. பின்னர் திருவிழாவிற்கான கால்கோல் நாட்டப்பட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை விழா ஆக. 11ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் எழுந்தருளி பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறும். மாலை 4.30-க்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளலும் நடைபெறுகிறது.
11ஆம் திருவிழாவான ஆக.12ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், மதியம் 1.30க்கு பச்சை சாத்தி தரிசனமும், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயிலில் தாகசாந்தியும், இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்தக் காட்சி மற்றும் திருக்கற்பூர தீப தரிசனமும் நடைபெறும்.
12ஆம் திருநாளான ஆக. 13ஆம் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்கள தரிசனம் ஆகியவை நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.