தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சேர்மன் அருணாசல சுவாமி கோயில், தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் 12 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்தாண்டுக்கான தை அமாவாசை திருவிழா இன்று துவங்கியது. இதையொட்டி நேற்று மதியம் 1 மணிக்கு சங்குமுக தீர்த்தம் கொண்டு வர புறப்பாடு நடந்தது. இன்று காலை 6 மணிக்கு தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோயில் முன்பு மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிக் கம்பத்தில் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார், கொடியேற்றி வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். சுவாமிக்கு பல்வேறு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகின்ற தை அமாவாசையான 16ம் தேதி மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனமும், அபிஷேக ஆராதனையும், மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். 17 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு 2ம் கால வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலையில் சுவாமி ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடைபெறும்.
18ம் தேதி திருவிழா நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடல், மதியம் 12 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சுவாமி ஆலிலைச் சயனம் மங்கள தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.